சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர், ஏற்காடு, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம், தலைவாசல், தாரமங்கலம் உள்பட பல பகுதிகளில் தினசரி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு விற்பனைக்காக சேலம் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இருந்தும் வர மிளகாய் என்று கூறப்படும் வத்தல் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
குறிப்பாக அதிக அளவில் மிளகாய் வத்தல் ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிளகாய் வத்தலை வியாபாரிகள் நேரடியாகவே கொள் முதல் செய்து சாக்கு மூட்டைகளில் வைத்து லாரிகள் மற்றும் இரயில்கள் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர், இவற்றை கடை உரிமையாளர்கள் சில்லரை விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதில் முதல் ரக மிளகாய் வத்தல்களில் ஒன்றான சிறிய அளவில் இருக்கும் வத்தல் விலை தற்போது உயர்ந்துள்ளது. இந்த வத்தல் காரம் அதிகமாக இருக்கும். மிளகாய் வரத்து முழுமையாக குறைந்துள்ளதால் விலை ஏற்றம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 170 ரூபாய்க்கு விற்ற இந்த வத்தல் தற்போது 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்குள் 100 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு அதிகபட்சமாக கிலோ 110 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த மிளகாய் வத்தல் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது, கிலோ 300 ரூபாயாக இரட்டிப்பாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ராம்நாடு மிளகாய் அதிகபட்சமாக கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது மட்டுமில்லாமல் அத்தியாவசிய தேவைகளான சீரகம், சோம்பு, மல்லி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் 50 ரூபாய் வரை கூடுதலாக விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால், அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று மொத்த விலை வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வு, மிளகாய் உற்பத்தி குறைவு காரணங்களினால் ஓரிரு மாதங்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவது மிகவும் கவலையளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு நடுத்தர மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.