அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.17 ஆகக் குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது.


அமெரிக்கா வரி விதிப்பு:


அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பொருளாதார ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பை அறிமுகம் செய்தார். இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. 


ரூபாய் மதிப்பு சரிவு:


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.17 ஆக குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. வர்த்தக நேர தொடக்கத்தில் 87.29 ஆக இருந்த ரூபாய் மதிப்பு 55 பைசா குறைந்து 87.17 ஆக நிறைவடைந்தது. 


கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் கனடா பொருள்களுக்கு 10% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.  இது பிப்ரவரி-4ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. டிரம்பின் நடவடிக்கைகளால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 87 ஆகத் தொடங்கிய நிலையில் பின்னர் 87.29 ஆக சரிந்தது.


துறை வல்லுநர் அனுஜ் செளத்ரி ரூபாய் மதிப்பு சரிவு குறித்து தெரிவிக்கையில்,” அமெரிக்க அதிபரின் அறிவிப்புகள் FII முதலீட்டாளர்கள் வெளியேறுவது ஆகிய காரணங்களால் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. ரிசர் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் முதலீட்டாளர்கள் கவனத்துடனே வர்த்தகத்தை கையாள்வார்கள்.”என்று தெரிவித்தார். 


இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 319.22  அல்லது 0.41% புள்ளிகள் சரிந்து  77,186.74  ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 121.10 அல்லது 0.52% புள்ளிகள் உயர்ந்து 23,361.05 ஆகவும் வர்த்தகமாகியது. 


 அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு ஆசியாவில் உள்ள சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கரன்சி மதிப்பும் சரிந்துள்ளது.