மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜகவைச் சேர்ந்தவருமான அனில் பிரோஸியா மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடன் தான் 15 கிலோ எடை குறைந்திருப்பதாகவும், அதனால் தனது தொகுதியின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
உஜ்ஜைன் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஸிகா தனது எடையைக் குறைத்தால் அவர் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் தனது தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய உஜ்ஜைன் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஸிகா, `உலகிலேயே நான் தான் அதிக பணம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்..ஏனென்றால் நான் ஒரு கிலோ குறைந்தால் என் தொகுதியின் வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தருவேன் என அமைச்சர் நிதின் கட்கரி மேடையில் கூறினார்.. அதனால் நான் இதுவரை சுமார் 15 கிலோ எடையைக் குறைத்துள்ளேன்.. எனவே பிரதமர் மோடியும், அமைச்சர் நிதின் கட்கரியும் நமது உஜ்ஜைனின் வளர்ச்சிக்காக நமக்கு வாழ்த்துகளைப் பொழிய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
தன்னிடம் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் என்ன சொன்னாலும் அதனைப் பின்பற்றுவதாகவும் உஜ்ஜைன் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஸிகா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24 அன்று, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்திற்கு வந்திருந்தார் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. அப்போது அவர் உஜ்ஜைன் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஸிகா உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனவும், அவர் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் உஜ்ஜைன் தொகுதியின் வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
மேலும், உஜ்ஜைன் எம்.பி அனில் பிரோஸிகா தன்னிடம் தன்னிறைவான வளர்ச்சிக்கான பட்ஜெட் கேட்டு வந்ததாகவும், அப்போது அவர் அனில் பிரோஸிகாவிடம் ஒரு நிபந்தனை விதித்ததாகவும் கூறியுள்ளார். `நான் உங்களைவிட எடை அதிகமாக இருக்கிறேன்.. நான் 135 கிலோ எடையில் இருந்தேன்.. தற்போது 93 கிலோ எடையில் இருக்கிறேன். அவரிடம் எனது பழைய புகைப்படத்தைக் காட்டினேன்.. மக்கள் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிவதில்லை.. எனவே ஒவ்வொரு கிலோ எடை குறைப்புக்கும், உஜ்ஜைனின் வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாய் தருவேன்.. ஆனால் கண்டிப்பாக எடையைக் குறைக்க வேண்டும். எப்படி என்பதை நான் கற்றுத் தருகிறேன்’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்