கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் சில்லறை வர்த்தகப் பணவீக்கம் 6.07 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும், இது மத்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்தின் வரம்பான 6 சதவிகிதத்திற்கு சற்றே அதிகமாக இருப்பதாகவும் மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வாடிக்கையாளர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை வர்த்தகப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் 6.01 சதவிகிதமாக இருந்தது. 


மத்திய ரிசர்வ் வங்கியின் உச்சபட்ச வரம்பான 6 சதவிகிதத்தை விட அதிகமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக சில்லறை வர்த்தகப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. வரும் 2026ஆம்ஆண்டு மார்ச் வரையிலான அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய அரசு ரிசர்வ் வங்கியைச் சில்லறை வர்த்தகப் பணவீக்கத்தை 4 சதவிகிதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதன் வரம்பு கூடுதலாக 2 சதவிகிதம் வரை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 



மத்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பொருளாதாரக் கொள்கையை வகுக்கும் போது சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டைப் பெரிதும் பயன்படுத்துகிறது. கடந்த மாதம், ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக் கொள்கை கமிட்டி வெளியிட்ட அறிவிப்பின் படி, ரெப்போ விகிதம் தொடர்ந்து பத்தாவது முறையாக 4 சதவிகிதத்திலேயே மாற்றங்கள் இல்லாமல் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. 


வாடிக்கையாளர்களின் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில், நாம் பயன்படுத்தும் உணவுகளில் இருக்கும் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் 5.43 சதவிகிதமாக இருந்தது, கடந்த பிப்ரவரி மாதம், 5.85 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கடந்த பிப்ரவரி மாதம், எண்ணெய் மற்றும் இதர எண்ணெய்ப் பொருள்களின் பணவீக்க விகிதம் சுமார் 16.44 சதவிகிதம் உயர்ந்ததால், வாடிக்கையாளர்களின் உணவின் பணவீக்கம் அதிகரித்ததாகக் கூறப்பட்டுள்ளது., மேலும், காய்கறியின் பணவீக்க விகிதம் சுமார் 6.13 சதவிகிதமாகவும், இறைச்சி, மீன் ஆகியவற்றின் பணவீக்க விகிதம் சுமார் 7.45 சதவிகிதமாகவும், முட்டைகளின் பணவீக்க விகிதம் சுமார் 4.15 சதவிகிதமாகவும், தானியங்கள் மற்றும் இதரப் பொருள்களின் பணவீக்க விகிதம் சுமார் 3.95 சதவிகிதமாகவும், சர்க்கரை, மிட்டாய் முதலான பொருள்களின் பணவீக்க விகிதம் சுமார் 5.41 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. 



உணவு, பானம் ஆகியற்றைப் போல, எரிபொருள் மற்றும் விளக்கு என்ற பிரிவின் பணவீக்க விகிதம் 8.73 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உடைகள் மற்றும் காலணிகளின் பணவீக்க விகிதம் 8.86 சதவிகிதமாகவும், வீட்டுவசதித் துறையில் சுமார் 3.57 சதவிகிதம் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


நேற்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பொருளாதாரத் தரவுகளின்படி, மொத்த விலை வர்த்தகத்திற்கான பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதம் 13.11 சதவிகிதமாக இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.