Retail Inflation: ஜூலை மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது
உச்சம் தொட்ட சில்லறை பணவீக்கம்:
நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 15 மாதங்களில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் 4.87 சதவீதமாக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஜூலையில் 2.57 சதவீதம் அதிகரித்து 7.44 சதவீதமானது. ஜூன் மாதம் 4.55 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பண வீக்க விகிதம் ஜூலையில் 11.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம் 11 சதவீதமாக இருக்கும் நிலையில் நகரங்களில் அது 12.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணவீக்க விகிதத்தை 6 சதவீதத்திற்குள் கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ள நிலையில், 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட்டால் 2023 ஜூலையில் காய்கறி விலை 37.43 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, உணவு தானியங்களின் விலை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு ஜூலை மாதத்தில 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ கொடுத்த எச்சரிக்கை:
ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆர்பிஐ வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்திலேயே தொடரும் என்று தெரிவித்தது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆர்பிஐ ரெப்போ விகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யவில்லை. இதற்கான காரணமானது, தக்காளி மற்றும் பிற காய்றிகளில் விலை சமீபகாலமாக உயர்ந்துள்ளதால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதன்படியே, ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
என்ன காரணம்?
நாட்டில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், தக்காளி விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உச்சத்தில் இருக்கிறது. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு சில இடங்களில் தக்காளி 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தக்காளிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. அதேபோல, மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. ஒரு கிலோ துவரம் பருப்பு 200 ரூபாய் வரை விற்பனையானது. இதுபோன்று, காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களின் விலையேற்றதாலே சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு:
இதற்கிடையில், திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.11 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. அக்டோபர் 2022ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் தலையிட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதற்கு முன்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 83.07 ஆக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.