தங்க முதலீட்டு பத்திரத்திட்டத்திற்கான 5 ஆம் கட்ட சந்தாவினை  ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் ஆகஸ்ட்13-ஆம் தேதி வரை கட்டலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இந்தியாவில் தங்க நகைகளை அழகிற்காகவும், முதலீடு செய்யும் நோக்கத்திலும் அதிகளவில் மக்கள் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு ஆண்டுக்கு 300 டன் தங்கத்தினை இறக்குமதி செய்தமையால் அந்நிய செலவாணி அதிகரித்தது. எனவே தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க சிலர் விரும்புவர்களுக்கு வசதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தங்க முதலீட்டு பத்திரத்திட்டத்தினை அறிமுகப்படடுத்தியது. இதன் மூலம் தங்கத்தினை பத்திரம் மூலமாக மக்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு கிராம் முதல் 500 கிராம் வரை ஒருவர் தங்கப்பத்திரத்தினை வாங்க முடியும் என்ற நடைமுறை இதில் உள்ளது.  குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்கப் பத்திரங்களை அரசு விற்பனை செய்துவருகிறது. அதன் படி, 2021 – 2022 ஆம் ஆண்டிற்காக தங்க முதலீட்டு பத்திர திட்டம் மே 2021 முதல் செப்டம்பர் 2021 வரை  அதாவது ஆறு தவணைகளாக  தங்கப்பத்திர திட்டம் விநியோகிப்படும் எனவும், இந்திய அரசின் சார்பாக பத்திரங்களை ரிசர்வ் வங்கி விநியோகிக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.



இந்நிலையில் ஏற்கனவே மே 31 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில்  இதுவரை 4 கட்ட சந்தாக்கள் முடிவடைந்துள்ளது.  தற்போது 5 ஆம் கட்ட தங்க முதலீட்டு பத்திரத்திட்டத்தினை  ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 13 வரை பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், தங்க முதலீட்டு  பத்திரத்திட்டத்திற்காக, சந்தா செலுத்தும் காலத்திற்கு முந்தைய வாரத்தின் 3 வேலை நாட்களில் தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்பதனை வெளியிடும். அதன்படி இந்த 5 ஆம் கட்ட தங்க முதலீட்டு பத்திரத்திற்கு கிராம் ஒன்றுக்கு ரூ. 4,790 என நிர்ணயம் செய்துள்ளது. இதோடு மட்டுமின்றி ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக்குப் பிறகு, ஆன்லைன் மூலம் விண்ணப்பக்கட்டணத்தையும் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ 50 வரை தள்ளுபடி செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.



இந்த தங்கப்பத்திரத்தினை வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேசன், தபால் அலுவலகங்கள், மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பத்திரத்தினை பெற்று முதலீட்டாளர்கள் பயன் அடையலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கப்பத்திர திட்டம் தொடக்கத்திலிருந்து 2021-ஆம் ஆண்டு மார்ச் இறுதி ஆண்டு வரை 25, 702 கோடி ரூபாய் நிதி திரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2020-21 ஆம் ஆண்டின் 12 தவணைகளில் இதுவரை மொத்தம் ரூ.16,049 கோடி (32.35 டன்) அளவிற்கு விநியோகம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறிப்பாக சிறு முதலீட்டாளர்களையும் கணக்கில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த தங்கப்பத்திர திட்டத்திற்கான முதிர்வு ஆண்டு 8 ஆண்டுகள் என்றாலும் 5 ஆண்டுக்கு பிறகு கூட இதிலிருந்து விலகிக்கொள்ள முடியும் என மத்திய அரசின் அறிவிப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.