உலகத்தின் மிகப் பெரிய பெருநிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தைச் சார்ந்த ரிலையன்ஸ் பவுண்டேசன் எனும் அமைப்பானது, கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தானும் இணைந்துகொள்வதாக அறிவித்து இருக்கிறது. இந்த பவுண்டேசனின் நிறுவனரும் தலைவருமான நிதா அம்பானி, இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் தொழிற்சாலை நிறுவனத்தின் 44ஆவது ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார். ரிலையன்ஸ் தொழிற்சாலைகள் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புக்கான அமைப்பான ரிலையன்ஸ் பவுண்டேசன், இதையொட்டி 5 வேலைகளை இலக்கு வைத்து செயல்பட இருக்கிறது என்றும் நிதா அம்பானி தெரிவித்தார். 


மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு முதல் தடுப்பூசி இயக்க விரிவாக்கம்வரை கொரோனா பிரச்னையில் இருக்கும் பல சவால்களைச் சமாளிக்க, ஐந்து இலக்குப்பணி இயக்கங்கள் மேற்கொள்ளப்படும். அவை: மிசன் ஆக்சிஜன் எனப்படும் ஆக்சிஜன் இயக்கம், கொரோனா கட்டமைப்புகளுக்கான மிசன் கோவிட் இன்ஃப்ரா இயக்கம், எம்ப்ளாயி கேர் எனப்படும் பணியாளர் பராமரிப்பு இயக்கம், மிசன் அன்ன சேவா எனப்படும் உணவுவழங்கல் இயக்கம், மிசன் வாக்சின் சுரக்சா எனப்படும் தடுப்பூசி இயக்கம் ஆகியவை. 


முன்னர் நாங்கள் ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை; திடீரென அதன் தேவை உருவானதும் சில நாள்களில் அதிக தூய்மையான தரமான திரவ ஆக்சிஜனை உற்பத்திசெய்யும்படியாக ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையை மாற்றியமைத்தோம்; சில வாரங்களில் நாள் ஒன்றுக்கு 1100 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்யும் அளவுக்கு திறன் உயர்த்தப்பட்டது என்றார் நிதா. 
மேலும், ”பொதுவாக இந்த அளவுக்கு திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க் ஓராண்டாவது பிடிக்கும். ரிலையன்ஸ் பொறியாளர்களின் முயற்சியானது அதீதமான மனித முயற்சியாக அமைந்தது. 85ஆயிரம் மணி நேர உழைப்பைச் செலுத்தி 10 நாள்களுக்குள் இதை சாதித்துக் காட்டினார்கள். எது அந்த சமயத்தில் தேவைப்பட்டதோ அதை ஆக அதிகபட்சமாக செய்துகாட்டினார்கள்.” என்று பாராட்டு மழை பொழிந்தார். 


இந்திய அளவிலான திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் 11 சதவீதத்தை ரிலையன்ஸ் நிறுவனமே தயாரித்து வழங்கியது; ஒரே இடத்தில் ஒரே நாளில் அதிக ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் விளங்கியது. நாடளவில் பத்தில் ஒரு கொரோனா நோயாளிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ஆக்சிஜன் வழங்கியது.” என்று கூறிய நிதா, இவற்றை இலவசமாக வழங்கியதாகவும் குறிப்பிட்டார். 
மும்பையில் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனை அமைத்ததை கோவிட் இன்ஃப்ராவின் அங்கமாகக் குறிப்பிட்டதுடன், தன் நிறுவனப் பணியாளர்களுக்கு எத்தனையோ நிறுவனங்கள் செய்ததைப் போல, ரிலையன்ஸ் ஊதியத்தைக் குறைக்கவில்லை என்பதைப் பெருமையாகவும் பிரஸ்தாபித்தார். தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் அரசு மற்றும் பிற பெருநிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு நடப்பு ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் பங்களிக்கப்போவதாகவும் நீடா அம்பானி கூறினார்.