ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அமேசான் நிறுவனத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததை அடுத்து ரிலையன்ஸ் மற்றும் ஃப்யூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பங்குகள் நேற்று சந்தையில் சரியத் தொடங்கின. 


ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஃப்யூச்சர் ரீடைல் நிறுவனம் இணைக்கப்படுவது இந்திய வணிக உலக அளவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இணைப்பாக இருந்தது. ஆனால் சர்வதேச நிறுவனமான அமேசான் ப்யூச்சர் ரீடைல் நிறுவனம் தங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி ரிலையன்ஸ் உடனான இணைப்பை தடைசெய்ய வேண்டும் என சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்தது. 






இதில் சிங்கப்பூர் நடுவர் மன்றம் அமேசானுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு செல்லாது எனச் சொல்லி ஃப்யூச்சர் க்ரூப் நிறுவனம் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிங்கப்பூர் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை இந்தியாவில் அமல்படுத்துவதற்குச் சட்டத்தில் இடமிருக்கிறது என்றும் அதனை உடனடியாக அமல்படுத்தவேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஃப்யூச்சர் க்ரூப் உடனான இணைப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரிலையன்ஸ் மற்றும் ஃப்யூச்சர் க்ரூப் பங்குகளில் நேற்று பெருத்த சரிவு ஏற்பட்டது.  இதனால் ரிலையன்ஸின் பங்குகள் 2.6 சதவிகிதம் வரை கீழே இறங்கின. அதாவது ஒரு பங்கின் விலை 2078.75 ரூபாயாகக் குறைந்தது. இது கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத நிலை. 



மற்றொருபக்கம் ஃப்யூச்சர் க்ரூப் பங்குகளின் விலை 10 சதவிகிதம் வரைக் குறைந்து 52.55 ரூபாயானது. இது  கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத நிலை. இந்த பாதிப்பின் எதிரொலி ஃப்யூச்சர் க்ரூப்பின் இதர நிறுவனங்களிலும் எதிரொலித்தது. சுமார் 17 சதவிகிதம் வரை அதன் பங்குகள் குறைந்தன.ஃப்யூச்சர் ரீடெய்லின் டாலர் பத்திரங்களின் விலை கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவு குறைந்து 68.33 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்து கூறியிருந்த ஃப்யூச்சர் ரீடெய்ல் நிறுவனம், ‘தீர்ப்பு நடுவர் மன்றத்தின் கட்டளை இங்கே செல்லும் என்றுதான் கூறியிருக்கிறதே ஒழிய இந்த விவகாரத்தில் நியாயம் யார் தரப்பு என எதுவும் சொல்லவில்லை. சட்டத்தில் இருக்கும் நுணுக்கங்களைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தை எப்படியேனும் நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஆவண செய்வோம். இதனால் பங்குதாரர்களுக்கும் நிறுவனத்தில் உழைப்பவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் கடமை’ எனச் சொன்னது. இதனால் ரிலையன்ஸின் நுகர்வோர் சந்தையில் எவ்வித பாதிப்பும் வராது என நிபுணர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.