RBI Foreclosure: சிறு குறு நிறுவனங்களுக்கான வங்கிக் கடன்களையும்,  முன்கூட்டியே செலுத்தும்போது  விதிக்கப்படும் அபராத கட்டணங்களை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கியின் பரிந்துரை:


பல்வேறு தேவைகளுக்காக தனிநபர்களும்,தொழில் நிறுவனங்களும் வங்கியில் கடன்களை பெறுகின்றன. அவற்றிற்கு நிலையான மற்றும் மிதக்கும் முறையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தான், மிதக்கும் வட்டி விகிதத்துடன் கூடிய கடன்களை முன்கூட்டியே அடைக்கும்போது அல்லது கடனின் ஒருபகுதி தொகையை முன்கூட்டியே மொத்தமாக செலுத்துவம் போது, விதிக்கப்படும் அபராதம் அல்லது கட்டணத்தை நீக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பாக வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், வணிக நோக்கில் தனிநபர், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் வாங்கிய மிதக்கும் வட்டியுடன் கூடிய கடன்களுக்கு, மேற்குறிப்பிடப்பட்ட சலுகைகளை வழங்க ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. 



வரம்புகள் என்ன? 


MSE கடன் வாங்குபவர்களைப் பொறுத்தவரை, புதிய வழிமுறையானது ஒரு கடனாளிக்கான  மொத்தம் அனுமதிக்கப்பட்ட வரம்பு ரூ.7.50 கோடி வரை பொருந்தும். அதை தாண்டிய தொகைக்கு முன்கூட்டியே அடைக்கும்போது அல்லது கடனின் ஒருபகுதி தொகையை முன்கூட்டியே மொத்தமாக செலுத்தும் போது அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது குறித்து மார்ச் 21, 2025 க்குள் பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.


வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள்:


ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள், கடன் வாங்குபவர்களுடனான ஒப்பந்தங்களில் கட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளைச் சேர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மலிவான கடன் பெறக்கூடிய பிற கடன் வழங்குநர்களிடம் அல்லது சிறந்த சேவைகளை வழங்கக்கூடிய கடன் வழங்குநரிடம் மாறுவதைத் தடுக்கிறது. எனவே, வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் எந்தவொரு பூட்டுதல் காலமும் இல்லாமல் கடனை முன்கூட்டியே செலுத்துதல் அல்லது முன்கூட்டியே அடைத்தல் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தனது வரைவு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 


தற்போதுள்ள விதிகள் என்ன?


தற்போதுள்ள விதிமுறைகளின்படி, சில வகை ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் (REs), வணிகம் அல்லாத பிற நோக்கங்களுக்காக, இணை-கடனாளிகள் அல்லது தனிப்பட்ட கடன் வாங்குபவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மிதக்கும் விகிதக் கடன்களுக்கு முன்கூட்டியே கடன் அடைப்பு கட்டணங்கள்/முன்கூட்டியே பகுதியை செலுத்துவதற்கு அபராதங்களை விதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. முன்னதாக வணிகம் அல்லாத நோக்கங்களுக்காக வாங்கிய தனிநபர் கடன்களுக்கே இந்த அபாரத விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது வணிக நோக்க கடன்களுக்கு அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்களின் செலவு கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது.