வரலாறு காணாத தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கத்தை வாங்குவது கனவாகவே மாறிவிட்டது. நகைக்கடைகளில் வெளியே நின்று தங்க நகைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்று காலையிலேயே சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்சி கொடுத்துள்ளது. தற்போது 8 கிராம் கொண்ட தங்கத்தின் விலை  1,02,160 ரூபாயாக எகிறியுள்ளது.

Continues below advertisement

வங்கியில் தங்க நகைகள் அடகு

இன்னும் ஒரு சில மாதங்களில் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயை தொடும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை அதிகரிப்பால் ஒரு பக்கம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தங்கத்தை வங்கிகளில் அடகு வைத்தால் அதிக பணம் கிடைப்பதால் மற்றொரு பக்கம் குஷியாக இருந்தனர். அந்த வகையில் தங்க நகைகளை அடகு வைக்கும் போது ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்றால் 70 ஆயிரம் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரை கடன் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அதிகளவு தங்க நகைகளை அடகு வைத்து புதிய நகைகளை வாங்குவது, வீடு, கார் வாங்குவது அல்லது மற்ற செலவுகளுக்கு பயன்படுத்துவது என இருந்து வந்தனர்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு 1.01 லட்சம் கோடியாக இருந்த தங்க நகை கடன், கடந்த அக்டோபர் 2025ஆம் ஆண்டில் 3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இரண்டு வருட காலத்தில் தங்க நகைகள் அடகு வைத்து வாங்கப்படும் கடன்களின் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் தான் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு புதிய அறிவுரையை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. அந்த வகையில் தங்க நகைகளுக்கான கடன்களை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ள நிலையில் தங்கத்திற்கு அதிக கடன்களை கொடுத்து சிக்கி கொள்ள வேண்டாம் எனவும் ரிஸ்க் மேனேஜ்மென்டை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்  கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இனி நகை கடனுக்கு கம்மியான பணம் கிடைக்கும்

தங்கத்தின் விலை வரும் நாட்களில் கணிசமான அளவு குறையும் பட்சத்தில் நகைக்கடன் கொடுத்த வங்கிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இதன் காரணமாக நகைகளை மீட்க முடியாத நிலையில் ஏலம் விடும்போது வங்கிகளுக்கு குறைந்த அளவே பணம் கிடைக்கும். எனவே தான் வங்கிகளை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஆர்பிஐ அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக தற்போது தங்க நகை கடன்களுக்கு 70 முதல் 72% அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை 60 சதவிகிதமாக வங்கிகள் கடன் தொகையை குறைத்துள்ளது. இதன் காரணமாக நகைகளை அடகுவைத்து அதிக பணத்தை பெறலாம் என எதிர்பார்த்து செல்லும் மக்களுக்கு ஒரு சவரன் தங்க நகைக்கு 55 ஆயிரம் முதல் 60ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.