இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம், பட்ஜெட்டிற்கு பிறகான முதல் கூட்டம்,  2022-23 ஆம் நிதி ஆண்டின் கடைசி கூட்டம் மற்றும் அதானி பங்குகள் சரிவு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு பின் கூடும் கூட்டம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது


நாணய கொள்கை கூட்டம்:


இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்தியா நாட்டிலுள்ள வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், நாட்டிலுள்ள பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் உள்ளது. மேலும், நாட்டில் விலைவாசி உயர்ந்தால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகவும் விளங்குகிறது.


ஆகையால், நாட்டின் பணவீக்கத்தை அடிக்கடி ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நாணய கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம், அல்லது ஆண்டுக்கு 4 முறையாவது கூட வேண்டும் என்பது விதியாகும். இந்நிலையில் பணவீக்கம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க நாளை முதல் 3 நாட்கள் ( பிப்.6 முதல் பிப். 8 ) இக்கூட்டம் நடைபெறுகிறது.


இந்த நாணய கொள்கை கூட்டமானது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலையில் கூட்டம் நடைபெறும். இறுதியில் உறுப்பினர்களின் பெரும்பான்மைக்கு ஏற்ப கூட்டத்தின் முடிவுகள் எடுக்கப்பட்டு பிப். 8ஆம் தேதி அறிவிக்கப்படும்,


பணவீக்கம் :


உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களும், தங்களது பணியாட்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். விலைவாசி உயர்வு காரணமாக, கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இந்தியாவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் அளவாக 6  ( 4 +- 2 ) ஐ நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்தியாவின் பணவீக்க விகிதமானது பல மாதங்கள் பணவீக்க அளவை தாண்டி காணப்பட்டன. ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 6 க்கு கீழ் குறைந்தது இந்தியாவுக்கு சற்று ஆறுதலை தந்தது.


வட்டி விகிதம்:


இந்நிலையில், நாளை தொடங்கும் கூட்டத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 அடிப்படை புள்ளிகள்  உயர்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள், வங்கியில் வீட்டு கடன் , வாகன கடன் வாங்கியோருக்கு இ.எம்.ஐ செலுத்தும் தொகையானது அதிகரிக்க கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சியால், அதானி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளிடம், ரிசர்வ் வங்கியானது விவரங்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அதானி குழும வீழ்ச்சி குறித்து, ஆளுநர் சக்திகாந்த தாஸ் , முதல் முறையாக வாய் திறப்பாரா என பலருக்கும் இக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  


Also Read: RBI Asks Banks: அதானி நிறுவனத்துக்கு வழங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் தகவல்களை கேட்கும் ரிசர்வ் வங்கி


Also Read: Budget 2023-2024: பட்ஜெட் 2023-இல், இந்தியா பிற நாடுகளுக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு?..