சினிமாவில் தாமதமாக நுழைந்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார் மலையாள நடிகர் துல்கர் சல்மான். மம்முக்கா என்று செல்லமாக அழைக்கப்படும் மம்முட்டியின் மகன் தான் துல்கர் சல்மான்.


வாரிசு நடிகர் என்றாலே விடலைப் பருவம் எட்டியவுடனேயே சினிமாவில் தலைகாட்டுவது தான் இந்தியப் பாரம்பரியமாக இருக்கிறது. ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் தனது 26வது வயதில் தான் திரையில் பிரவேசித்தார். 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படம் மூலம் தான் அவர் அறிமுகமானார். இப்போது மலையாள திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார். இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் தடம் பதித்துள்ளார்.


அவர் நடித்து சீதா ராமம் திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 5ல் (நாளை) வெளியாகிறது. 
இந்நிலையில் துல்கர் சல்மான அளித்த பேட்டியில், "நான் சினிமாவில் லேட்டாக தான் வந்தேன். எனக்கு அப்போது என் அப்பா தாங்கியிருந்த அந்த பொறுப்பை ஏற்பது கனமாக இருந்தது. எனது தந்தையின் பெயரை நான் கெடுத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தேன். நான் நடிகனாகி தோல்வியடைந்தால் அது அவர் மீது நான் சுமத்தும் தோல்வியாகிவிடும் என்று பயந்தேன். இது எனது தனிப்பட்ட பயணம். திரை ஜாம்பவான்களின் வாரிசுகள் அனைவரும் இதே போன்று பிரச்சனையை எதிர்கொண்டிருப்பார்கள் என்று சொல்ல இயலாது.


நான் சரியான நேரத்திற்காக காத்திருந்தேன். எனது பயம், சந்தேகத்தைத் தாண்டி சினிமாவில் குதிக்கும் நேரம் வரும் வரை பொறுத்திருந்தேன்" என்று கூறியுள்ளார்.


சீதாராமம் படத்தைப் பற்றி துல்கர் பேசுகையில்,  "இந்த மாதிரியான கதையில் நான் நடித்தது எனக்கு கிடைத்த அதிஷ்டம்தான். இது ஒரு தனித்துவமான கதை. இந்தக்காலத்தில் சொல்லப்படும் காதல் கதைகளை போல இது இருக்காது. இந்தப்படம் உலகளாவியது. திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.




சீதாராமம் படத்தில் துல்கருடன் நடித்துள்ள மிருனாளும் பேட்டியில் பங்கேற்றிருந்தார். அவர் பேசும்போது, "சினிமாவில் மொழி எல்லைகள் எல்லாம் உடைந்துவிட்டன. இது மாதிரியான ஆரோக்கியமான போட்டி எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. வடக்கில் உள்ளவர்கள் தாங்கள் அடுத்து பார்க்க வேண்டிய தெலுங்கு அல்லது மலையாளப்படம் என்னவென்ரு யோசிக்கிறார்கள். தெலுங்கு படம், மலையாளப் படம் என்பதில்லாமல் இந்தியப் படம் என்று இப்போது பார்க்கப்படுகிறது" என்றார். அண்மையில் நடிகர் தனுஷ் கூட ஒரு பேட்டியில், இப்போதெல்லாம் தன் படங்களை தமிழ்ப்படம் என்று பார்க்காமல் இந்தியப் படமாக பார்க்கப்படுவதை வரவேற்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இயக்குநர் ஹனு ராகவ்புடி யக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம்  ‛சீதா ராமம்’.தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் நாளை (ஆக 5) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.