டிஜிட்டல் கரன்சியைப் பயன்படுத்தி 9 வங்கிகள் 48 பரிவர்த்தனைகளை மேற்கொண்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் சோதனை முயற்சியாக நடைபெற்ற டிஜிட்டல் கரன்சி ரூ.275 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
ரிசர்வ் வங்கியின் மூலமாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டிருந்தார்.
அதன்படி, டிஜிட்டல் கரன்சி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் சோதனை முயற்சியாக ரிசர்வ் வங்கி இன்று அறிமுகம் செய்தது. கிரிப்டோகரன்சியை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் சார்பில் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி, பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு முதலீட்டாளர்களும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் காட்டப்படாமல் இருந்தது.
டிஜிட்டல் நாணயம்
உலகம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசே டிஜிட்டலில் நாணயத்தை அறிமுகம் செய்துள்ளது. இது சிபிடிசி எனப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (central bank digital currency) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இந்த டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்று நம்பப்படுகிறது.
டிஜிட்டல் நாணயமும் பிட்காயினும் ஒன்றா?
டிஜிட்டல் நாணயமும் பிட்காயினும் வெவ்வேறு. இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், இந்த டிஜிட்டல் நாணயம் வெளியாக உள்ளது. இது மத்திய வங்கியால் டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பணமாகும். இந்த டிஜிட்டல் நாணயம் காகிதத்தில் அச்சிடப்படும் பணத்தைப் போன்றதுதான். அதே மதிப்பு கொண்டது.
அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கதாக இருக்கும். அரசு அச்சடிக்கும் பணத்துடன் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். டிஜிட்டல் வடிவில் இருப்பது மட்டுமே ஒரே வித்தியாசமாகும்.
கிரிப்டோகரன்சியும் அல்ல
அதே நேரத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (சிபிடிசி) கிரிப்டோகரன்சி அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனினும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பாதுகாப்புடன் இயங்கும் வகையில், டிஜிட்டல் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோகரன்சிக்கு 30% வரி
தனியார் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்குக் கடிவாளம் போடும் விதமாக, டிஜிட்டல் முறை சொத்து பரிமாற்றங்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதலாக 1 சதவீதப் பரிவர்த்தனை வரியும் விதிக்கப்படுகிறது.
ஏன் டிஜிட்டல் நாணயம்?
மக்களின் பரிமாற்ற வசதிக்காகவும் பிற பாதுகாப்புக் குறைவான தொழில்நுட்பங்கள் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்தைத் தடுக்கவும் டிஜிட்டல் ரூபாய் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல கிரிப்டோகரன்சி உள்ளிட்ட தனியார் மெய்நிகர் பணப் பரிமாற்றத்துக்கு செக் வைக்கவும், அரசே டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்கிறது.
இதன்மூலம் பிட்காயின் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகள் மூலம் பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், வரி ஏய்ப்பு போன்றவை நடைபெறாமல் தடுக்கப்படும். அதேபோல கோடிக்கணக்கில் செலவு செய்து, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் தேவையும் குறையும். டிஜிட்டல் தொழில்நுட்பம் மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும்.