ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம்பெறும் என்ற தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.






இந்திய ரூபாய் நோட்டுகளில் மாகாத்மா காந்தி அவர்களின்  படத்தினை அச்சிட்டு வெளியிடுவதைப்போல்  இனிவரும் காலாங்களில் புதிதாக அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுகளில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் இந்திய தேசிய கீதத்தினை எழுதியவரும் கவிதைக்காக நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாஹூர் ஆகியோரின் புகைப்படங்களை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் பரிசீலனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியானது.




அப்துல் கலாமும் ரவீந்தரநாத் தாஹூரும்


அதன் படி இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன்  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாஹூர் ஆகியோரின் படங்களை வாட்டர் மார்க் வடிவங்களில் அச்சிட, இந்திய  ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் (SPMCIL) இரண்டு தனித்தனி மாதிரி ரூபாய் நோட்டுகளை ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக சொல்லப்பட்டது.


ஐஐடி டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானியிடம் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகளில் அரசின் பாதுகாப்பு காரணிகளைப் பூர்த்தி செய்யும் ஏதாவது ஒன்றினை அரசிடம் ஒப்படைக்கும் படி மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தத்தகவலை மத்திய ரிசர்வு வங்கி மறுத்துள்ளது.