இந்தியர்கள் யாருமே நவம்பர் 8-ந் தேதியை மறக்கவே மாட்டார்கள். ஏனென்றால், 2016ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியே பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு பிறகு நாட்டில் புதியதாக ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
2018ம் ஆண்டே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை மட்டுமே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லுபடியாகும். அதுவரை மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம்.
வங்கிகளில் மாற்றுவது எப்படி?
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். அதற்கான கால அவகாசம்தான் வரும் செப்டம்பர் 30-ந் தேதி ஆகும். இதன்படி, பொதுமக்கள் வரும் 23-ந் தேதி முதல் நாட்டில் உள்ள எந்தவொரு வங்கிக்கிளைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அளித்து மாற்றிக்கொள்ளலாம்.
இதன்படி, ஒருவர் ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் வரை மட்டுமே வங்கியில் மாற்ற முடியும். அதற்கு மேல் மாற்ற முடியாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாலும், பலரும் போன் பே. கூகுள் பே, கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதாலும் பெரும்பாலான இடங்களில் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது.
குறைந்த புழக்கம்:
இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் கடந்த 2016-ஆம் ஆண்டு வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது போல, மீண்டும் வங்கிகளில் வரிசைகள் காணப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த முறை ரிசர்வ் வங்கி போதிய அவகாசத்தை வழங்கியுள்ளது.
தற்போதுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் 2017ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அவற்றின் மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் முடிவடைகிறது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூபாய் 6.73 லட்சம் கோடியில் இருந்து ரூபாய் 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களின் ரூபாய் நோட்டுகளின் தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:2 Thousand Rupees Note: மக்களே... ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளும் செல்லாது - ரிசர்வ் வங்கி அதிரடி
மேலும் படிக்க: Karnataka Politics: அடம்பிடிக்கும் சீனியர்கள்.. பாடம் கற்காத காங்கிரஸ்.. பயன்படுத்திக்கொள்ளும் பாஜக..!