கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பினால்  அன்றாடத் தேவைகளுக்காக தங்க நகைகளை அடகு வைப்போரின் எண்ணிக்கை 81.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


மக்களின் ஆடம்பரத்திற்காக மட்டுமில்லாமல் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுவதில் முக்கியப்பங்கு வகிப்பது தங்கம் மட்டும் தான். கரன்சி நோட்டுகளைப்போல் அல்லாமல் தங்கம் என்ற உலோகம்  உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தங்க நகைகள் இல்லாமல் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறாது என்று தான் கூறவேண்டும். முக்கியமாக தென் இந்தியாவில் தங்கத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை உச்சத்தினைத்தொட்டு வந்தாலும் ஒரு புறம் அதனை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதோடு மட்டுமின்றி வருமானம் குறைவாக இருந்தாலும் அதற்கேற்ற நகைச் சீட்டுகள் எல்லாம் போட்டு தங்கத்தினை வாங்கிவருகின்றனர் நம் சாமானிய மக்கள். மேலும் நிலங்கள்  வாங்குவது போல்  தங்கத்தினை வாங்குவது பாதுகாப்பான முதலீட்டாக கருதி கிராமப்புற மக்கள் அதிகளவில் இதனை வாங்கி வருகின்றனர்.



இப்படி ஒவ்வொரு நாளும் தங்க நகைகள் வாங்குவதற்கான மோகம் அதிகரிப்பின் காரணமாகத்தான் சிறு நகரத்திலும் கூட பல தங்க நகைக்கடைகள் இருப்பதைக்காண முடிகிறது. குறிப்பாக உலகில் உள்ள மொத்தத் தங்கத்தில் 11 சதவீதம் இந்தியக் குடும்பங்கள் வசம் உள்ளன. அமெரிக்க அரசு, உலக வங்கி, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவற்றின் மொத்த தங்க இருப்பை விட இந்தியாவில் இருப்பது அதிகம் என்றே கூறலாம். மேலும் இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில், தென் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருப்பதாக தங்கம் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் அமைப்பு கணிக்கிறது. இப்படி தனக்கென்று ஒரு உச்சத்தினைப்பெற்றுள்ள தங்கத்தினை வேறு வழியின்றி அடமானம் வைக்கும் நிலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது இந்த கொரோனா பெருந்தொற்று.


ஆம். கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் வேலைவாய்ப்பினை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் அன்றாடத் தேவைகளைக்கூட நிவர்த்தி செய்யமுடியாத நிலையில் தான், தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து அதன் மூலம் பெறப்படும் பணத்தின் மூலம் குடும்பத்தினை நடத்திவருகின்றனர். இந்நிலையில் எப்பொழுதையும் விட கடந்த ஓராண்டாக தங்க நகைக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், வேளாண் கடன் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புள்ளி விபரங்கள் அதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


குறிப்பாக கொரோனா பெருந்தொற்று சமயத்தில், தங்க நகைக்கடன் என்பது 34.9 சதவீதத்தில் இருந்து 81.6 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் தங்க நகைக்கு மட்டுமே ரூ.62,221 கோடி கடன் தரப்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  இதோடு தனி நபர் கடனும் 10.8 சதவீதத்தில் இருந்து 16.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, தனி நபர் கடனானது 27 லட்சத்து 86 ஆயிரத்து 519 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டுக்கடன் வாங்குவதும் 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், கல்விக் கடன் பெறுவது குறைந்துள்ளது. மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.62,720 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.63,805 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டிருந்தது.



மேலும், க்ரெடிட் கார்டு  மூலம் கடன் பெறுவது, வங்கி முதலீட்டுப் பத்திரங்களை அடமானமாக வைத்து கடன் பெறுவது போன்றவையும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதிலும், முதலீட்டுப் பத்திரங்கள் மூலமாக ரூ. 65,891 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி  பட்டியலிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது மூன்றாவது அலையும் ஆகஸ்ட் மாத இறுதியில் அதிகரிக்கும் என கூறி வரும் நிலையில் நிச்சயம் இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. ஏற்கனவே தங்களிடம் உள்ள நகைகளை அடகு வைத்துக் குடும்பத்தினை நடத்தி வரும் சாமானிய மக்கள்  சொல்ல முடியாத அளவிற்கு துயரத்தினை சந்திப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.