டாடா விற்ற பங்குகளை வாங்கி ரூ.900 கோடி சம்பாதித்துள்ளார் தொழிலதிபர். அதுவும் ஒரே மாதத்தில் அவர் இந்த பெருந்தொகையை சம்பாதித்திருக்கிறார். அவரின் பெயர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்குச்சந்தை முதலீட்டில் முக்கியத்துவம் பெற்றவர்.
ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனர். இதுதவிர, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் பங்கு வகிப்பவர் தான் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இந்தியப் பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ஒரே மாதத்தில் ரூ.900 கோடி சம்பாதித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு இந்தியாவின் வாரன் பஃபெட் என்ற செல்லப்பெயரும் உள்ளது. அதேபோல் இந்தியப் பங்குச்சந்தையில் பிக் புல் என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.
இந்த மாதம் பங்குச்சந்தையில் ஒரு சில நிறுவனங்களின் பங்கு விற்பனை தொடர்ந்து ஏற்றம் கண்டன. டாடா மோட்டார்ஸ், டைடன் கம்பெனி அந்த ஒரு சில நிறுவனங்களில் அடங்கும். டாடா மோட்டார்ஸ் பங்குவிற்பனை இந்த மாதம் 13% வரை அதிகரிக்க, டைடன் கம்பெனி பங்குகள் 11.40% வரை அதிகரித்தது.
இந்த இரண்டு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ததன் வகையிலேயே ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு ரூ.893 கோடி லாபம் கிடைத்துள்ளது.
2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு போக்கை கூர்ந்து கவனித்தால், ராகேஷ் 3,77,50,000 பங்குகளை வைத்துள்ளார். செப்டம்பர் 2021ல் டாடாவின் ஆட்டோ பங்குகள் விலை ரூ.287.30 என்றளவில் இருந்தன. செப்டம்பர் 2021ல் டாடா மோட்டார்ஸ் பங்குகளின் வாயிலாக மட்டும் ராகேஷ் ரூ.164.9675 கோடி ஈட்டியுள்ளார். அதேபோல் டைட்டன் பங்குகளின் போக்கை ஏப்ரல் முதல் ஜூன் 2021 காலகட்டத்தில் கண்காணித்தாலும் பிக் புல், 3,30,10,395 பங்குகளை வைத்துள்ளார். அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா 96,40,575 பங்குகளை வைத்திருந்தார். இருவரும் சேர்ந்து மொத்தம் 4,26,50,970 பங்குகளை வைத்திருந்தார். செப்டம்பரில் டைட்டனின் பங்கு விற்பனை ரூ.1921.60 முதல் ரூ.2092.50 வரை சென்றன. ஒரு பங்கின் விலை கிட்டத்தட்ட ரூ.170.90 வரை அதிகரிக்க ராகேஷ் ரூ.728.90 கோடி ஈட்டியுள்ளார்.
இதனால் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா, டைடன் பங்குகளின் மீதான முதலீட்டின் வாயிலாக மட்டும் செப்டம்பர் மாததில் ரூ.893.87 கோடி (ரூ728.90 கோடி + ரூ164.97 கோடி) ஈட்டியுள்ளார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கைதேர்ந்த பட்டயக் கணக்கரும் கூட. இவர் எப்போதுமே நிதி, தொழில்நுட்பம், மருந்துத் துறை பங்குகளில் அதிகம் முதலீடு செய்வார்.