ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழகம், சிக்கிம், ஜம்மு-காஷ்மீா் உள்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நிறைவடைந்த பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகின்றன. அதன் காரணமாக நாடு முழுவதும் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை 34 முறையும், டீசல் விலை 33 முறையும் உயா்த்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 பைசா உயா்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 18 பைசா உயா்த்தப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.51-க்கும், டீசல் ரூ.89.36-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100.44 ஆகவும், டீசல் விலை ரூ.93.91 ஆகவும் இருந்தது.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸா, தமிழகம், கேரளம், பிகா, பஞ்சாப், லடாக், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. ராஜஸ்தான், ஒடிஸா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.65 ரூபாய், டீசல் லிட்டர் 92.99 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே இன்று பெட்ரோல் விலை 47 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.12 ரூபாய்க்கும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டர் 93.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா நெருக்கடி காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 4-ஆம் தேதிமுதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.11-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.63-ம் அதிகரித்துள்ளது.விலை உயரக் காரணம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பே காரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதன் உற்பத்தி அதிகரிக்கப்படாததால் விலை உயா்ந்து வருகிறது.கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கலால், மதிப்புக் கூட்டு வரியும் (வாட்) பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று பல மாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.