சேமிப்பின் முக்கியத்துவம்:
வருமானத்தின் ஒரு பகுதியை வங்கியில் சேமிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கும். மேலும், இப்போதெல்லாம் அனைத்தும் வங்கி பரிவர்த்தனைகளாக மாற்றப்பட்டுள்ளது. பல வங்கிகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்க பல இலாபகரமான திட்டங்களை வழங்குகின்றன. பொதுத்துறைகள் வங்கிகள் என்றில்லாமல், தனியார் வங்களின் எண்ணிக்கை ஏராளம். அவை வழங்கும் சேவைகள் மற்றும் வசதிகள் மாறுபடலாம். மேலும், மக்கள் எப்போதும் தங்கள் பணத்தை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்க உதவும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதற்காக அஞ்சல்துறை பல திட்டங்களை வடிவமைத்துள்ளது. இது அரசால் வழங்கப்படும் திட்டங்கள் என்பதால், இதில் செய்யும் முதலீடு பாதுகாப்பாக இருப்பதுடன், உத்தரவாதமான வருவாயை உறுதி செய்கிறது. அந்த வகையில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி:
அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதியில் (15-year Public Provident Fund Account) 7.1 சதவீத வட்டி ஆகும். குறைந்தபட்சம் 15 ஆண்டுள் இதனுடைய லாக் இன் பீரியட் என்று கூறப்படுகிறது. அதாவது, நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் 15 ஆண்டுகள் வரை அதிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது. 15 ஆண்டுகள் முதிர்வடையும் காலத்தில் அது இரட்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (Senior Citizen Savings Scheme) கீழ், ஆண்டுதோறும் 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. வங்கி சேமிப்புத் திட்டங்கள், நிரந்தர வைப்பு நிதிகள் போன்றவற்றைக் காட்டிலும் இது அதிகமாகும். ஒவ்வொரு காலாண்டு தொடக்கத்திலும் இந்த வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். மேலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம்.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு, 100 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுதோறும் 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பாண்டு எனப்படும் ஒப்பந்த ஆவணங்களின் லாபத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒருமுறை வட்டி விகிதம் மாற்ற அமைக்கப்படும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம்:
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீட்டாளருக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி ஆண்டுக்கு ஒரு முறை முதலீட்டுடன் சேர்க்கப்படும். இந்த திட்டத்தை தொடங்க ரூ.1000 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் சேர்ந்த 10 வருடங்களில், இரட்டிப்பு லாபத்துடன், முதலீடு செய்த தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்:
பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் 8 சதவீதம் ஆகும். இதில் குறைந்தபட்சம் தொகையாக ரூ.250 கணக்கை தொடங்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தொடங்கலாம். பெண் குழந்தைக்கு 18 வருடங்கள் நிறைவடைந்துவிட்டால், தேவைக்காக இடையிலேயே பணத்தை எடுத்து கொள்ளலாம். 15 வருடங்கள் நீங்கள் செலுத்திய பிறகு 8 சதவீத வட்டியுடன் 21 வருடங்கள் கழித்து பெற்றுக் கொள்ளலாம்.