இந்தாண்டு கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதைதவிர, நடுத்தர மக்கள் உபயோகப்படுத்தும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. அதில், இந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை. நகரப்புறம் மட்டுமின்றி தற்போது கிராமப்புறங்களில் இருசக்கர வாகனத்தை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுபோக்குவரத்தை மட்டும் நம்பியில்லாமல், சொந்தமாகவே லோனில் இருசக்கர வாகனத்தை வாங்கி தங்களின் அன்றாக வேலைக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர் நடுத்தர மக்கள். ஆனால், அவர்களுக்கு பெட்ரோல் விலை அதிகரிப்பு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவ்ர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர். கொரோனாவால் ஏற்கெனவே பொருளாதார பிரச்னை இருக்கும் நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் ஏறும் பெட்ரோல் விலையால் மேலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலையும் 23 காசுகள் அதிகரித்து ரூ.91.15க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாள் விலை உயர்வும், ஒருநாள் மாற்றமின்றியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குமராட்சியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99,26 ஆகவும், டீசல் விலை ரூ.93.38 ஆகவும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. போக்குவரத்து செலவையும் சேர்ந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களில் பெட்ரோல் விலை தமிழ்நாட்டில் சதத்தை எட்டும் என்று கூறப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை
நாட்டின் 7 நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்துள்ளது. ராஜஸ்தானின் கங்கா நகரில் ரூ.106.64, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ரூ.103.78, போபாலில் ரூ.103.71, மகாராஷ்டிராவின் ஒளரங்கபாத்தில் ரூ.103, கோலாபூரில் ரூ.101.88, மும்பையில் ரூ.101.76, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ரூ.102.14, ஹைதராபாத்தில் ரூ.99.31, கடலூரில் ரூ.98.89, பெங்களூரில் ரூ.98.75க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை நிலவரம்
ராஜஸ்தானின் கங்கா நகரில் ரூ.99.50, ஜெய்ப்பூரில் ரூ.95.37, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ரூ.95.14, மகாராஷ்டிராவின் ஒளரங்கபாத்தில் ரூ.95.09, கிருஷ்ணகிரியில் ரூ.93.36, கடலூரில் ரூ.93.02க்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டிலும் பெட்ரோலின் விலை சதத்தை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள உள்ள விலைக்கே பெட்ரோலை போட முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கொரோனா ஊரடங்கால் பொதுப்போக்குவரத்து எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலையில், இருசக்கர வாகனத்தை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் 100 ரூபாய் விலை உயர்ந்தால், அதுமேலும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கிவிடும். எனவே, பெட்ரோல் விலையை குறைக்கக்கோரி பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து ஒருமாதம் ஆன நிலையில் பெட்ரோல் விலை குறைக்கக்கோரி பலர் வலியுறுத்துகின்றனர். இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை பெட்ரோல் பங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பெட்ரோல் பங்குகள் முன் ஆர்ப்பாட்டம்-கே.எஸ்.அழகிரி அறிவிப்பு