சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது.
அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த 16ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.31க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.88.7க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாளும் அதே விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.94.54க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 27 காசு அதிகரித்து ரூ.88.34க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் இதே விலை இருந்த நிலையில், இன்றும் அதே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக விலை நிலையாக இருந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் அவர்கள் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக திடீரென பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, திமுக அறிக்கையில் அறிவித்ததுபோல, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன், பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை நிலையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை
டெல்லி - பெட்ரோல் 92.85, டீசல் 83.51
கொல்கத்தா - பெட்ரோல் 92.92, டீசல் 86.35
மும்பை - பெட்ரோல் 99.14, டீசல் 90.71
இது நீடிக்குமா, அல்லது கூடுமா, இல்லை மக்கள் விருப்பப்படி இறங்குமா என்பது நாளை தெரியும்.