சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.49க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100ஐ கடந்து விற்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.




பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெட்ரோலின் விலை ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை ஆகி வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 52 நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 32 முறை உயர்த்தப்பட்டுள்ளது.


இதற்கிடையே சட்டப்பேரவையில், திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வரி குறைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் ஆளுநர் உரையில் அது குறித்த அறிவிப்பு இடம் பெறாதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார், தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றும், எப்போது சரியாகிறதோ அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைப்போம் எனவும் பதிலளித்தார்.





தமிழகத்தில் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு சதவீத நிதியை செலவிட்டு வருவதாக குறிப்பிட்ட நிதியமைச்சர். கொரோனா ஊரடங்கு கால கட்டத்திலும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தமிழக அரசின் சார்பில் இரண்டு தவணைகளாக 2000 ரூபாய் வழங்கி இருப்பதை கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டில் செஸ் வரி 9 ரூபாயாக இருந்த போது அப்போது இருந்த அதிமுக அரசு, மாநில அரசு வரியை 28 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தி இருந்ததாகவும், ஆனால் 2006-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோதும், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை 3 முறை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி குறைத்ததாகவும் தெரிவித்தார். பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து விற்பனை ஆகி வருவதால், உடனடியாக பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.