சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 25வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கையிருப்பில் உள்ள சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப் பயன்பாட்டு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா முதலான நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் அதனைச் சமாளிக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைத் தங்கள் கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை விடுவிக்குமாறு கூறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.




 


மாதிரி சில்லறை விற்பனை மையத் திட்டம்:  


இதற்கிடையே, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மாதிரி சில்லறை விற்பனை மையத் திட்டத்தை (Model Retail Outlet Scheme) தொடங்கியுள்ளதோடு, தர்பன்@பெட்ரோல்பம்ப் எனும் டிஜிட்டல் நுகர்வோர் பின்னூட்டத் திட்டத்தையும் (Digital Customer Feedback Program) அறிவித்துள்ளன.


இதன்மூலம், மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் இணைந்து ஒரு நாளைக்கு 6 கோடிக்கும் அதிகமான நுகர்வோருக்கு சேவையாற்றி கொண்டிருக்கும் தங்களது கட்டமைப்பின் சேவை தரங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த உறுதி ஏற்றுள்ளன.


மத்திய பெ


ட்ரோலியம் & இயற்கை எரிவாயு, துறை அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி இந்த முன் முயற்சியைத் தொடங்கி வைத்தார். 


வேகமாக மாறிவரும் நுகர்வோர் மனநிலை மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை மனதில் கொண்டு உயர்தர வாடிக்கையாளர் சேவையை இந்த முன்முயற்சி மூலம் வழங்க எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.


நாடு முழுவதும் உள்ள 70,000-க்கும் அதிகமான சில்லறை விற்பனை மையங்கள் 5 கட்ட மதிப்பீட்டு முறையின் வாயிலாக இத்திட்டத்தின் மூலம் மதிப்பிடப்படும். சேவையின் தரம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், டிஜிட்டல் முறையில் விற்பனை ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.