Petrol Diesel Price Today, March 24: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, நேற்றைய நிலையிலேயே தொடர்கிறது.


பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34-ஆகவும் தொடர்கிறது. கடந்த 14ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இதேநிலையில் தொடர்கிறது.  அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய,  பெட்ரோல், டீசல் விலை சுமார் 660 நாட்களுக்கும் மேலாக எவ்வித மாற்றமும் பெறாமல் இருந்தது. இந்நிலையில், தான் கடந்த 14ம் தேதி பெட்ரோல், டீசல் விலையில் தலா 2 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவித்தது.


சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரம்:


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கருத்தில் கொண்டு,  எரிபொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.  கொரோனா காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்தது. உக்ரைனுக்கு எதிரான போரை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவிற்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அப்போது கூட எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. இதனால், உச்சபட்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110 வரை விற்பனையானது, வாகன ஓட்டிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்தது. ஆனால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய அரசின் இலக்கு:


சுற்றுச்சூழல் மாசுபாடு, கச்சா எண்ணெய் ஆதாரங்கள் குறைந்து வருவது போன்ற காரணங்களால், எரிபொருட்களுக்கு மாற்றாக புதிய ஆற்றல் ஆதாரங்களை நோக்கி நகர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தான், 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்பது என்ற தேசிய உயிரி எரிபொருள் கொள்கையை கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், அதை 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது 2025ம் ஆண்டிலேயே நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.