Modi GST: பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம்,  நடுத்தர மக்கள் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளதற்கான காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement


ஜிஎஸ்டி சீர்திருத்தம்...


கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி 2024ம் ஆண்டு வரையிலான, பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை முன்னெடுத்தது. 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தாலும், முதல் 10 ஆண்டுகளில் கிடைத்த தனிப்பெரும்பான்மையை இந்த முறை இழந்தது. இதையடுத்து, ரூ.12.75 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என பட்ஜெட்டில் அதிரடியான சலுகையை அறிவித்தது. அதைதொடர்ந்து, இன்று முதல் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கைகளால் பொதுமக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து, வாங்கும் திறன் மேம்படும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.



வெற்றியை தராத பெரு நிறுவனங்கள்?


அதேநேரம், வழக்கமாக பெரு நிறுவனங்களுக்கே பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் அதிகப்படியான சலுகைகளை வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால், அதற்கு நேர் எதிராக நடுத்தர மக்கள் மீது மத்திய அரசு அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதற்கு பெரு நிறுவனங்களுக்கான சலுகைகள் மூலம், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாததே காரணமாக கருதப்படுகிறது. 


லாபத்தை அள்ளி போட்டுக்கொண்ட பெரு நிறுவனங்கள்:


கடந்த 2019ம் ஆண்டில் அடிப்படை கார்ப்ரேட் வரியை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 30% லிருந்து 22% ஆக குறைத்தது. இதன் மூலம் தொழில் மற்றும் நுகர்வை அதிகரிக்க முயற்சித்தது. இந்த சேமிப்பு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டில் பயன்படுத்தப்படும் என்றும், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஊதிய உயர்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அரசாங்கம் கருதியது. ஆனால், 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக லாபம் ஈட்டிய போதிலும், அவர்கள் ஊதிய உயர்வை அறிவிக்கவில்லை . இறுதியில் வரிச் சலுகையிலிருந்து கிடைத்த மொத்த லாபத்தையும் நிறுவனங்களே அனுபவித்தன.


கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்ட சலுகை காரணமாக, இரண்டு நிதியாண்டுகளில் (2019-20 மற்றும் 2020-21) அரசாங்கம் ரூ.1.84 லட்சம் கோடி வருவாயை இழந்தது, இது பொருளாதார வளர்ச்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி, தனிநபர்களை விட தனியார் நிறுவனங்கள் குறைந்த வரிகளை செலுத்தின. அதாவது 2023-24 ஆம் ஆண்டில் தனிநபர் வருமான வரி வசூல் ரூ.10.44 லட்சம் கோடியாக இருந்த நிலையில், பெருநிறுவன வரி வசூல் ரூ.9.11 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


மோடியை முதுகில் குத்திய பெருநிறுவனங்கள்:


கார்ப்பரேட்டுகளுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் தேவையை மறைமுகமாக அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அது பலனளிக்காததோடு, பெருநிறுவனங்களால் மத்திய அரசு வஞ்சிக்கப்பட்டது. இந்நிலையில் தான் ​​மக்களிடமே நேரடியாக பணத்தை வழங்க அரசு முயற்சி மேர்கொண்டுள்ளது. வருமான வரி விலக்கு மாதிரியான நேரடி வரி நிவாரணத்திற்குப் பிறகு, தற்போது மறைமுக வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது. தேவை வளர வேண்டுமென்றால், வருமானம் வளர வேண்டும். திட்டமிடப்பட்ட ஜிஎஸ்டி நிவாரணம் மக்களின் கைகளில் அதிக பணத்தை மிச்சப்படுத்தும் மற்றும் நுகர்வு அதிகரிக்கும் என அரசு நம்புகிறது.


நடுத்தர மக்கள் மீது நம்பிக்கை


நாட்டின் உற்பத்தி வலுப்பெற்று , நுகர்வோர் பட்டியலில் அதிகமான மக்கள் இணைந்தால், இந்தியாவின் நுகர்வு கதையும், அதன் மூலம் பொருளாதாரமும் அதிக விகிதத்தில் வளரும். 140 கோடி பேர் இருந்தாலும் அதில் 10 சதவிகிதம் அதாவது 14 கோடி பேரிடம் மட்டுமே எந்தவொரு விருப்பமான பொருட்கள் அல்லது சேவைகளுக்கும் செலவிட பணம் உள்ளது என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ப்ளூம் வென்ச்சர்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் வருமான வரி மற்றும் செலவு வரி (ஜிஎஸ்டி) நிவாரணம் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக சம்பாதிக்கவும் சேமிக்கவும் அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. மக்கள் எவ்வளவு அதிகமாக சேமிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் செலவு செய்வார்கள் என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு  உதவுவார்கள் என்றும் அரசு நம்புகிறது.


2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கு குறைந்தபட்சம் 8% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் தேவை. பெரிய நிறுவனங்களின் மீதான அவரது நம்பிக்கை பலனளிக்காத சூழலில் தான்,  நாட்டின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் மீது தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார்.