செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமலே பழைய நிலையிலேயே தொடர்கிறது.


செல்வமகள் சேமிப்புத் திட்டம்:


பெண்குழந்தைகளின் கல்வி, மேம்பாடு, திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வமகள் சிறுசேமிப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார்.  10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு அக்குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களால் வங்கி அல்லது தபால் நிலையங்களில் இத்திட்டத்தின் கீழ் தொடங்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு நிதியாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வரலாம். தொடக்கத்தில் ஆயிரம் ரூபாயாக இருந்த குறைந்தபட்ச வைப்பு நிதி பின்னர் 250 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. 




இத்திட்டத்தின் சலுகைகள்:


ஆண்டுதோறும் செலுத்தி வரும் இத்தொகையினை பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி செய்தவுடன் முழுவதுமாக எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்காத பட்சத்தில் அதிகபட்சமாக 21 வயது வரை இந்த முதலீட்டிற்கு வட்டி வழங்கப்படும். பின்னர் முதிர்வுத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இடையில், மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக குறிப்பிட்டத் தொகையை உரிய சான்றிதழ்களுடன் எடுத்துக்கொள்ள முடியும். பெண்ணின் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்குப் பின்போ, 18 வயது பூர்த்தியடைந்ததற்கானச் சான்றிதழை சமர்ப்பித்து மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்குப் பிரிவு 80சி-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம்.


வட்டி மாற்றம்:


சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படுவது போலவே, செல்வ மகள் திட்டத்திற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். கடந்த 2018 ஜனவரி 1 முதல் 8.1 சதவித வட்டி விகிதம் லாபம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் 7.6% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதத்தில் இந்த காலாண்டில் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய நிலையிலேயேத் தொடர்கிறது.




கோபிநாத் கமிட்டி பரிந்துரை:


பங்குச்சந்தைகள், க்ரிப்டோ முதலீடுகள் வீழ்ச்சியை தொடர்ந்து சந்தித்து வந்தாலும், சிறுசேமிப்புகள் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியிலேயே ஆழ்த்தியிருக்கிறது. அரசுப்பத்திரங்கள் கடந்த ஓராண்டில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் கோபிநாத் கமிட்டி 2011ல் வழங்கியப் பரிந்துரையின் படி சிறுசேமிப்பு முதலீட்டாளர்களுக்கு வட்டி  விகிதத்தை உயர்த்த வேண்டும். கடந்த 12 மாதங்களில் 10 ஆண்டு சேமிப்பு பத்திரங்களின் மதிப்பு உயர்ந்திருப்பதால் செல்வமகள் சிறுசேமிப்புத் திட்டத்திற்கான வட்டி 8.06 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல பிபிஎஃப் மதிப்பும் உயர்ந்ததால் அதன் வட்டியும் 7.8% ஆகவும், மூத்த குடிமக்கள் சிறுசேமிப்பிற்கான வட்டி தற்போதைய 7.40 சதவீதம் என்ற நிலையில் இருந்து 8.31 சதவீதமாக மாறும் என்று கணிக்கப்பட்டது.


மாறாத வட்டி விகிதம்:


ஆனால், கோபிநாத் கமிட்டியின் ஃபார்முலா எப்பொழுதும் சரியாக பின்பற்றப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 10 ஆண்டு பத்திரங்களின் மதிப்பு 6 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது.  இதனால், மேற்சொன்ன திட்டங்களுக்கான வட்டியும் 6.4% என்ற அளவிற்கு கணிசமாக குறைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் பின்னர் பழைய நிலைக்கே மாற்றப்பட்டது. இந்த ஆண்டு சிறுசேமிப்பு கணக்குகளின் மதிப்புகள் உயர்ந்த நிலையில் செல்வமகள் சிறுசேமிப்பு வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாற்றம் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.