நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தனிமனிதர்களின் பொருளாதார விவகாரங்களை நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் விதமாக வகுத்துக் கொள்வதில் பலருக்கும் சிரமங்கள் இருக்கும். இங்கு பட்ஜெட், சேமிப்பு, கடன், வரி, காப்பீடு, ஓய்வூதியம் முதலான வாழ்க்கையின் மிக முக்கியமான பொருளாதார முடிவுகளை மேற்கொள்ளும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான ஐடியாக்களை இங்கே பட்டியலாக குறிப்பிட்டுள்ளோம்... 


1. பட்ஜெட்டைக் கணக்கில் கொள்ளும் போது, பெரிய செலவுகளின் மீது முதலில் கவனம் செலுத்த வேண்டும்.  


விலை அதிகம் இருக்கும் பொருள்களான வீடு, கார் முதலானவற்றை வாங்கும் போது, அதிகளவில் பணம் செலவு செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். உதாரணமாக, புதிதாக கார் வாங்கும் போது அதன் விலை 5 லட்சம் ரூபாயாக இருக்கிறது என்றால், அதே காரை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்றாக வாங்கினால் அதன் விலையை விட சுமார் 2 லட்சம் ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும். 



2. சேமிப்புக்கான குறிக்கோளை முதலிலேயே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். 


இந்த ஆண்டு எனது ஓய்வுக்காக நான் 1 லட்சம் ரூபாய் சேமிப்பில் செலுத்தவுள்ளேன் என்று ஒரு குறிக்கோளை முதலில் தேர்ந்தெடுத்து, பின்பு அதற்கேற்ப உழைக்க வேண்டும். உதாரணமாக, மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும் என திட்டமிட்டால், அதற்கேற்ப வருமானத்தை அதிகரித்தோ, செலவுகளைக் குறைத்தோ இந்தச் சேமிப்பை நிறைவேற்றலாம். 


3. எளிதில் மதிப்பை இழக்கும் பொருள்களை வாங்குவதற்காக அதிக வட்டி விகிதம் கொண்ட கடன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். 


எந்த சூழலாக இருந்தாலும் கடன் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். எனினும், அனைத்து கடன்களும் ஒரே மாதிரியானவை அல்ல. அதிக வட்டி விகிதம் கொண்டிருக்கும் கடனை முதலில் தவிர்க்க வேண்டும். கல்விக்கான கடன், தொழில் கடன் முதலானவற்றைப் பெறுவதில் பிரச்னை இல்லை. ஏனெனில் இந்தக் கடன்கள் முதலீடுகளைப் போல எதிர்காலத்தில் லாபம் பெற்றுத் தரும். 


4. வரி விதிக்கப்படக்கூடிய வருமானத்தைக் குறைக்கவும்.


இதன் பொருள் வரியைக் குறைக்க வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது அல்ல. மருத்துவம், கல்வி முதலானவற்றிற்கு நீங்கள் பணியாற்றும் நிறுவனங்கள் உங்கள் ஊதியத்தோடு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்துவது வரி குறைப்பதற்கு வழிவகுக்கும். 



5. உங்களால் பணம் செலுத்தக்கூடிய செலவுகளைக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோராமல் இருக்க வேண்டும். 


திடீரென ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிப்பதற்காகவே காப்பீட்டுத் திட்டங்கள் இயங்கி வருகின்றன. இவை தக்க சமயங்களில் உங்களுக்கு உதவும். எனவே எந்தெந்த பொருள்களின் மீது காப்பீட்டை செலுத்துகிறீர்கள் என்று கண்காணிக்க வேண்டும். உதாரணமாக, கார் மீது காப்பீடு செலுத்துவது உதவிகரமாக இருக்கும்; அதே வேளையில் ஸ்மார்ட்ஃபோன் மீதான காப்பீடு பயன்படாமல் போகலாம். 


6. ஓய்வு பெறும் காலத்திற்காக சேமிக்காமல், முதலீடு செய்யுங்கள். 


மாதம் தோறும் நாம் சேமிக்கும் தொகை காலப்போக்கில் பண வீக்கம் காரணமாக நமது ஓய்வுக் காலத்தில் பயன்படாமல் போகலாம். எனவே அதனை வங்கிக் கணக்கில் செலுத்துவது, பங்குச் சந்தை முதலீடுகள் முதலான முதலீடாக மாற்றுவது, எதிர்காலத்தில் கூடுதல் தொகையைப் பெற்றுத் தரும்.