கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்ற வங்கி கணக்கு திட்டத்தை தொடங்கியது. நாட்டில் அனைவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த கணக்கில் வங்கி சேமிப்பு, வைப்புக்கணக்குகள், பணம் அனுப்புதல், பணம் எடுத்தல், கடன் காப்பீடு, ஓய்வூதியம் பெறுதல் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். 


இணையவழி மூலமாகவும் ஜன்தன் வங்கிக்கணக்கை திறக்கலாம் அல்லது சாதாரண வங்கி சேமிப்பு கணக்கை ஜன்தன் யோஜனா வங்கிக்கணக்காகவும் மாற்றலாம். ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் ருபே டெபிட் கார்டுகள் வழங்கப்படுவது வழக்கம்.




இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி வரை ஜன்தன் வங்கிக்கணக்கிற்காக ருபே கார்டு பெற்றவர்களுக்கு காப்பீடு பணமாக ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவி்க்கப்பட்டு இருந்தது. எஸ்.பி.ஐ.யின் புதிய திட்டப்படி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 28க்கு பிறகு ஜன்தன் வங்கி கணக்கிற்காக ருபே கார்டு பெற்றவர்களுக்கு விபத்து காப்பீடு தொகையாக 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் ஜன்தன் வங்கிக்கணக்க வாடிக்கையாளர் வங்கிக்கணக்கு தொடங்கிய 90 நாட்களுக்குள் ருபே டெபிட் கார்டை பயன்படுத்தி வங்கிககளுக்கு இடையிலோ அல்லது வங்கிகணக்கிற்குள்ளோ குறைந்தது ஒரு பணப்பரிவர்த்தனையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். அந்த பணப்பரிவர்த்தனை வெற்றிகரமாக இருந்தாலும் அல்லது தோல்விகரமானதாக இருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.




இந்தியாவிற்கு வெளியே வெளிநாட்டில் விபத்து நடைபெற்று உயிரிழக்க நேரிட்டாலும் காப்பீட்டு பணத்தை பெற முடியும். முறையான ஆவணங்களை பெற்று இந்திய மதிப்பில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.


விபத்தினால் உயிரிழப்பவரின் காப்பீட்டுத் தொகையை பெறுபவர் வங்கி வாடிக்கையாளரால் நாமினியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது வாடிக்கையாளரின் வாரிசு என்று நீதிமன்ற உத்தரவு வேண்டும்.  விபத்தில் உயிரிழந்ததற்கான ஆவணங்களாக உயிரிழப்பு சான்றிதழின் அசல் அல்லது நகல், காவல் நிலையத்தில் பதிவான எப்.ஐ.ஆர். புகார் நகல், பிரதே பரிசோதனை நகல், வாடிக்கையாளர் மற்றும் நாமினியின் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் காப்பீட்டுத் தொகை 10 ஆவணங்களை சமர்ப்பித்த 10 நாட்களுக்குள் கிடைக்கும். இந்த பலன் அடுத்தாண்டு மார்ச் 2022 வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.