இன்றைய சூழலில் நம்பிக்கையான ஒரு இடத்தில் நம்முடைய பணத்தினை முதலீடு செய்து வருமானம் பெறலாம் என அனைவரும் நினைப்பது பொதுவான ஒன்று தான். இப்படிப்பட்ட சூழலில் தான் 2 கோடிக்கு குறைவான பணம் மற்றும் குறைந்த நாள்களுக்குக் கூட முதலீடு செய்தாலும் அதிக வட்டியுடன் லாபம் தரும் டெபாசிட் திட்டத்தினை பிரபல வங்கி ஒன்று அறிமுகம் செய்துள்ளது. ஆம். இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அவ்வப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவிப்பதோடு அதனைச் சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. அதன்படி நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவில் சிறப்பு டெபாசிட் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் தனிநபர் முதல் மூத்த குடிமக்கள என அனைவரும் டெபாசிட் செய்யும் தொகைக்கு அதிக வட்டியுடன் லாபத்தினைப்பெறும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டத்தை எந்த எஸ்பிஐ கிளை அல்லது எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் பெறலாம்.
இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் 75 நாள், 75 வாரம், 75 மாதம் வரையிலான டேர்ம் டெபாசிட்களுக்கு 0.15 சதவீதம் கூடுதல் வட்டி பெறலாம். இதன் கீழ் 75 நாள், 525 நாள், 2,250 நாள் என கால வரம்புகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வசதி கொடுக்கப்படுகிறது.
தற்போதைய நடைமுறையில் 75 நாள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.90 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் சுதந்திர தின சிறப்புத் திட்டத்தின் கீழ் 3.95 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதேபோல, 525 நாள் வரம்பு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2,250 நாள் வரம்பு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.40 சதவீதத்திலிருந்து 5.55 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 75 நாள் கால வரம்புக்கு 4.40 சதவீதத்திலிருந்து 4.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 525 நாள் டெபாசிட்களுக்கு 5.60 சதவீத வட்டி கிடைக்கும். தற்போது, எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ள சிறப்பு டெபாசிட் திட்டம் மூத்தக்குடிமக்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதால் சாமானிய மக்கள் மிகவும் ஆர்வத்துடன் முதலீடு செய்துவருகின்றனர்.