நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமாக இருப்பது பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ). கல்வி, வீடு என பல காரணங்களுகாக மக்கள் இந்த வங்கியையே நம்பியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, நிதி அடிப்படையிலான கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை (எம்சிஎல்ஆர்) உயர்த்தியுள்ளது எஸ்பிஐ.


மக்களுக்கு அதிர்ச்சி:


10 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது எஸ்பிஐ. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஒரு அடிப்படை புள்ளி என்பது சதவீத புள்ளியில் நூற்றில் ஒரு பங்காகும்.


இந்த முடிவால் ஏற்கனவே கடனை வாங்கியவர்களின் மாத தவணை உயர போகிறது. கடன் வாங்குவதால் செலவு அதிகமாக போகிறது.


ரெப்போ வட்டி விகித உயர்வு எதிரொலி:


வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் உயர்த்திய நிலையில், நிதி அடிப்படையிலான கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது எஸ்பிஐ. ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


தற்போது வெளியான அறிவிப்பின்படி, நிதி அடிப்படையிலான கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்கான எம்சிஎல்ஆர் 8 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத எம்சிஎல்ஆர் 8 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


ஆறு மாத எம்சிஎல்ஆர் இப்போது 8.40 சதவீதமாக உள்ளது. ஓராண்டு, இரண்டு ஆண்டு மற்றும் மூன்றாண்டுகளுக்கான எம்சிஎல்ஆர் முறையே 8.50 சதவீதம், 8.60 சதவீதம் மற்றும் 8.70 சதவீதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, எம்சிஎல்ஆர் என்பது வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை வட்டி விகிதமாகும். கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்காக முன்னதாக இருந்த அடிப்படை வட்டி விகித அமைப்பை மாற்றி எம்சிஎல்ஆர் கொண்டு வரப்பட்டது.


கடந்த 2016ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எம்சிஎல்ஆர் முறை அமல்படுத்தப்பட்டது. எம்சிஎல்ஆர் அடிப்படையில் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் செயல்முறையை வரையறுக்கிறது.


எம்சிஎல்ஆர் என்றால் என்ன?


எளிமையாகச் சொன்னால், ஒரு வங்கியோ அல்லது கடன் வழங்குபவரோ அளிக்கும் குறைந்தபட்ச வட்டி விகிதம். ஆனால், ரிசர்வ் வங்கியால் சில விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்கள் உட்பட பெரும்பாலான நுகர்வோர் கடன்கள் எம்சிஎல்ஆரை சார்ந்தே உள்ளன.


எம்சிஎல்ஆர், வங்கியின் ரெப்போ விகிதம் மற்றும் நிதி செலவுகளுடன் நெருக்கமாக தொடர்புடையவை. எனவே, ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால் அது வீட்டுக் கடன் விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் என்ன?


நிலையான வீத வீட்டுக் கடன்கள் எம்சிஎல்ஆர்-ஆல் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.