நீங்கள் வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும் அதில் கொஞ்சம் சேமிக்க வேண்டும். இல்லாவிடில்,உங்கள் எதிர்காலத்தில் பல பொருளாதார நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.


“வாழ்வழிந்து செலவு செய்தால் வாழ்க்கை மலரும், வரவை மீறி செலவு செய்தால் வாழ்க்கை கருகிவிடும்“ என்பதை ஒவ்வொருவரும் மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். ஆம் இன்றைய சூழலில் சேமிப்பு என்பது பலரின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒருவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லாவிடில் நிச்சயம் எதிர்காலத்தை நகர்த்திக்கொண்டே செல்வதே அவர்களுக்கு கடினமாக விஷயமாக தான் இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். மேலும் வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும் அதற்கேற்றால் சேமிக்க வேண்டும் எனவும், எப்படி சேமிக்க வேண்டும்? எதில் முதலீடு செய்யலாம்? என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் என்ன கூறுகிறார் என்பதை நாம் இங்கு அறிந்துக்கொள்வோம்.





பொதுவாக ஒருவர் வாழ்க்கைத் தரம் அடுத்த நிலைக்குப் போக வேண்டும் என்று  நினைத்தீர்கள் என்றால், நிச்சயம் சேமிப்பை நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்னதாக நம்முடைய வருமானத்தில் 50 சதவீதத்தை நீங்கள் சேமிக்க முடியும். இது முடியுமா? என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் முடியும் எனவும் தற்போது 30 வயதில் தான் பெரும்பாலானோர் திருமணம் செய்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது 20 வயதில் இருந்து சம்பாதிக்க ஆரம்பத்தால் தாராளமாக நீங்கள் சேமிக்கும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.


மேலும் உங்களது தேவைகளை வருமானத்திற்குள் நீங்கள் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். முக்கியமாக உங்களது குழந்தைகளுக்கு உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது தான் அவர்களை எதிர்காலத்தில் பிரச்சனை இல்லாமல் கொண்டு செல்லும். சேமிப்புக்கென்று நீண்ட கால சேமிப்பு, குறைந்த கால சேமிப்பு என்று எதுவும் இல்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரை தங்கம் குறைந்த கால சேமிப்பு என்று நான் கூறுவேன். ஏனென்றால் நமக்கு மருத்துவம் எமர்ஜன்சி காலத்தில் தங்கம் தான் உதவியாக இருக்கும்.


ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளுதல்:


நம்முடைய சேமிப்பில் மற்றொரு முக்கியமான விஷயம் ஆடம்பரத்திற்காக எதையும் செய்யாது. குறிப்பாக நான் யாருன்னு தெரிந்துக்கொள்வதற்காகவே பலர் ஆடம்பரமாக திருமணத்தை நடத்துகின்றனர். இதில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறும் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீசினிவாசன், என்னைப் பொறுத்தவரை ஆடம்பரமாக தன் வீட்டில் திருமணத்தை நடத்திய அம்பானி பணக்காரர் இல்லை என கூறியுள்ளார். ஆனால் டாடா குடும்பத்தில் 6 பேரை வைத்துமட்டும் நடத்திய திருமணம் என்றாலும் மக்கள் தற்போது மதிக்கக்கூடிய மற்றும் பணக்காரராக டாடா குடும்பத்தினர் தான் உள்ளனர். எனவே ஆடம்பரமாக எதையும் செய்வதைத் தவிர்த்து சேமிக்க வேண்டும் என்கிறார்.





இதோடு மட்டுமின்றி உங்களது வாழ்க்கையில் தேவையில்லாதவற்றைக்குறைத்துக்கொண்டு சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களது வாழ்வில் முன்னேற்றத்தைக்கொடுக்கும் எனவும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகிறார். முக்கியமாக சேமிப்பதற்கு  4 விஷயங்கள் உள்ளது எனக்குறிப்பிடும் அவர், கடன் கொடுத்தால் கிடைக்கும் வட்டி, முதலீட்டில் கிடைக்கும் லாபம், தங்க முதலீடு, சேமிப்பு போன்றவை தான் என்கிறார். எனவே யாராலும் சேமிக்க முடியாது என்பது தவறான கருத்து. குறைவான சம்பளம் வாங்கினாலும் அதில் மிச்சம் இருக்கும் 1 ரூபாயைக்கூட நீங்கள் சேமித்துப்பழகலாம்.