வரும் ஜூலை 1 முதல், கிரெடிட் கார்ட் விநியோகம், பில்லிங், அக்கவுண்ட் மூடல் முதலான விவகாரங்களுக்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்தப் புதிய கிரெடிட் கார்ட் விதிமுறைகள் இந்தியாவில் செயல்பட்டு வரும் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விதிமுறைகள் 2022 என்ற பெயரில் ரிசர்வ் வங்கி இந்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகள், சாமானியர்களுக்கு உதவும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 


வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய கிரெடிட் கார்ட் விதிமுறைகள் என்ன?


கிரெடிட் கார்ட் கோரப்படாத சூழலில் கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் அவற்றை விநியோகிக்க முடியாது. 


புதிய கிரெடிட் கார்ட் விதிமுறைகளின்படி, கிரெடிட் கார்ட் கோரப்படாத பட்சத்தில் விநியோகிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உறுதியாகத் தெரிவித்துள்ளது. `கிரெடிட் கார்ட் கோரப்படாத பட்சத்தில், பயனாளரின் அனுமதியின்றி கார்ட் ஆக்டிவேட் செய்யப்பட்டாலோ, அப்க்ரேட் செய்யப்பட்டாலோ, கிரெடிட் கார்ட் நிறுவனம் பயனாளரிடம் பிடித்தம் செய்த தொகையைத் திரும்ப செலுத்துவம் மட்டுமின்றி, இரண்டு மடங்கு தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளது. மேலும், கிரெடிட் கார்ட் யார் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ளதோ, அவர் இவ்வாறு நேரும் போது ரிசர்வ் வங்கியைத் தொடர்புகொள்ளலாம். கட்டணமின்றி வழங்கப்படும் கிரெடிட் கார்ட்களில் மறைமுக கட்டணங்கள் பெறப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 



கிரெடிட் கார்ட் சேவையை நிறுத்தக் கோரியும் நிறுத்தாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.


கார்ட் பயனாளர்களிடம் இருந்து தங்கள் சேவையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் 7 பணி நாள்களுக்குள் கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்ட் சேவையை நிறுத்தியவுடன், அதுகுறித்த அறிவிப்பைப் பயனாளர்களுக்கு ஈ மெயில், எஸ்.எம்.எஸ் முதலானவற்றின் மூலமாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் இவ்வாறு செய்யத் தவறினால் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் 500 ரூபாய் தொகையைப் பயனாளருக்கு அபராதமாக செலுத்த நேரும். 


கிரெடிட் கார்ட் பேலன்ஸ் தொகை கார்ட் பயனாளரின் அக்கவுண்டிற்குச் செலுத்தப்பட வேண்டும்.


கிரெடிட் கார்ட் பயனாளரின் அக்கவுண்டில் கிரெடிட் பேலன்ஸ் இருந்தால், அதனை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனப் புதிய கிரெடிட் கார்ட் விதிமுறைகளின் கீழ் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 



உங்கள் கிரெடிட் கார்ட் கட்டணக் காலத்தை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்


கிரெடிட் கார்ட் கட்டணங்கள் அதன் பில் உருவாக்கப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நிர்ணயிக்கப்படுகின்றன. வரும் ஜூலை 11 முதல் உங்கள் கிரெடிட் கார்டின் கட்டணக் காலம் முந்தைய மாதத்தின் 11ஆம் நாள் தொடங்கி, தற்போதைய மாதத்தின் 10வது நாள் முடிவடையும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 


கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் தவறான பில்களை அனுப்ப முடியாது


மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் மட்டுமின்றி, கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் தவறான பில்களை அனுப்ப முடியாது. புதிய கிரெடிட் கார்ட் விதிமுறைகளின்படி, கிரெடிட் கார்ட் பயனாளர் தனது பில்லை எதிர்த்தால் கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் விளக்கம் அளித்து, ஆவணங்களைச் சான்றுகளாக புகார் தெரிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.