முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே தபால் அலுவலகங்களில் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் நடைமுறையில் உள்ளது.


சாமானிய மக்கள் முதல் அனைத்துத் தரப்பட்ட மக்களையும் கருத்தில் கொண்டு இந்திய தபால் துறை சார்பாக தொடர் வைப்பு நிதி, நிலையான வைப்பு நிதி, செல்வமகள் திட்டம், மாதாந்திர வருமான திட்டம் என்பது போன்ற பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இருந்தப்போதும் குறைவான முதலீட்டில், நீண்ட கால அடிப்படையில் அதிக லாபத்தினைத் தரக்கூடிய திட்டங்கள் என்றால் நிச்சயம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறத்தான் செய்யும். அப்படி ஒரு முக்கியமானத் திட்டம்தான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். அப்படி  என்ன மற்ற சேமிப்புத் திட்டங்களை விட மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்தது என நீங்கள் கேட்கலாம். ஆம், இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் சிறு தொகை கூட 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகிவிடுகிறது. எனவே தற்போது கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் சந்தை நிலவரம் என்பது மாறி மாறிவரும் நிலவிவரும் நிலையில், தபால் நிலையத்தில் உள்ள கிசான் விகாஸ் பத்ரா திட்டம் நிச்சயம் பயனளிப்பதாக இருக்கும். எனவே இத்திட்டத்தினைத் தொடங்க வேண்டும் என்றால் என்னென்ன ஆவணங்கள் தேவை? மற்றும் தகுதி என்ன? என்பது பற்றி முதலில் இங்கு தெரிந்துகொள்வோம்.



தபால் நிலையத்தில் கிசான் விகாஸ் பத்திரத்திட்டத்தினை நீங்கள் தொடங்க வேண்டும் என்றால் நினைத்தால்,  குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. எனவே உங்களிடம் Pan card இருந்தாலே இந்தத் திட்டத்தினை நீங்கள் ஆரம்பிக்கலாம். ஆனால் 50 ஆயிரத்திற்கு மேல் Pan card மற்றும் ஆதார் அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும் 10 லட்சத்திற்கு மேல் ஒருவர் முதலீடு செய்யவேண்டும் என்றால் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணம், சம்பள விபரம் போன்றவற்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.


இதனை 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பெறமுடியும். தனிநபர் அல்லது  3 பேர் வரை இணைந்து கிசான் விகாஸ் பத்திரத்தினை வாங்கலாம். இதனை ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு எளிதாகவும் மாற்றலாம். அதேபோல ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து நீங்கள் எந்த அஞ்சல் அலுவலகத்திற்கு பத்திரக்கணக்கினை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.



இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டும் ஒருமுறை மத்திய அரசு நிர்ணயம் செய்யும் நிலையில், தற்போதைய நிலவரப்படி இதன் வட்டி விகிதம் 6.9 சதவீதமாக உள்ளது. எனவே இத்திட்டத்தில் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தினாலும் இரண்டு மடங்காக 10 ஆண்டுகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.