Firecracker Insurance: தீபாவளியை முன்னிட்டு போன் பே செயலி வழங்கும் பட்டாசு காப்பீடு, வெறும் 9 ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது.
ஃபோன்பே பட்டாசு காப்பீடு:
தீபாவளி பண்டிகையை அக்டோபர் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கு, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சம்பவங்களில் இருந்து உங்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க PhonePe முன்வந்துள்ளது. அதன்படி, ரூ.9 மட்டும் செலுத்தினால் ரூ.25 ஆயிரத்திற்கு காப்பீடு பெறும் வசதியை வழங்கியுள்ளது. இந்த குறுகிய கால கவரேஜ் பண்டிகை காலத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்களுக்கு மலிவு மற்றும் சரியான நேரத்தில் பாதுகாப்பை வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பட்டாசு காப்பீடு திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
பட்டாசு காப்பீடு திட்டத்தை PhonePe செயலியில் வாங்கலாம். இதில், பயனர்கள் தங்கள் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு குடும்ப உறுப்பினர்கள் வரை காப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது குடும்பத்தின் பாதுகாப்பிற்கான காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகளுக்கு மலிவு விலையில் குறுகிய கால காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக, பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் கட்டண நிறுவனமான PhonePe அறிவித்துள்ளது. இந்த காப்பீட்டில், வாடிக்கையாளர்கள் வெறும் 9 ரூபாய் விலையில் 10 நாட்களுக்கு 25,000 ரூபாய் வரை கவரேஜ் பெறுவார்கள்.
திட்டத்தின் கீழ் என்னென்ன பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன?
- காப்பீட்டுத் தொகையில் ரூ.9 பிரீமியத்தில் ஜிஎஸ்டி உட்பட ரூ.25,000 காப்பீட்டுத் தொகையை பெறலாம்
- திட்டத்தின் கவரேஜ் 25 அக்டோபர் 2024 முதல் நவம்பர் 3, 2024 வரை 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்
- இந்தத் திட்டத்தில் மருத்துவமனை காப்பீடு, பகல்நேர சிகிச்சை மற்றும் விபத்து மரணம் ஆகியவை அடங்கும், இது பாலிசிதாரர்களுக்கு மட்டுமே.
- இந்த பாலிசிகளின் விற்பனை நவம்பர் 3, 2024 அன்று முடிவடையும்.
- அக்டோபர் 25க்குப் பிறகு ஒரு பயனர் பட்டாசுகளை வாங்கினால், வாங்கிய தேதியிலிருந்து பாலிசி கவரேஜ் தொடங்கும்
PhonePe செயலியில் காப்பீட்டுத் தொகையை பெறுவது எப்படி?
படி 1: முதலில், PhonePe செயலியில் உள்ள இன்சூரன்ஸ் பிரிவுக்குச் சென்று முகப்புப்பக்கத்தில் இருந்து Firecracker Insuranceஐத் தேர்ந்தெடுக்கவும்.
படி 2: திட்டப் பலன்களுடன் ரூ.25,000 காப்பீட்டுத் தொகையும் ரூ.9 நிலையான பிரீமியமும் உள்ளடங்கிய உங்களின் திட்ட விவரங்களை இப்போது பார்க்க முடியும்.
படி 3: அடுத்து, காப்பீட்டாளரின் தகவலைப் பார்க்க முடியும் மற்றும் திட்டப் பலன்களின் விரிவான விவரங்களைப் பெறலாம்.
படி 4: கடைசியாக, பாலிசிதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, செயல்முறையை முடிக்க 'செலுத்துவதற்குச் செல்லவும்' என்பதைத் தட்டவும்.
திட்டத்தின் நோக்கம் என்ன?
பட்டாசு தொடர்பான காயங்கள் காரணமாக, ஏற்படும் எதிர்பாராத நிதிச் சுமையை எதிர்த்துப் போராட PhonePe இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து PhonePe இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் சர்வீசஸின் CEO விஷால் குப்தா கூறுகையில், “ இந்த கவரேஜ் குடும்பங்களுக்கு அத்தியாவசியமான பாதுகாப்பை வழங்குகிறது, விபத்துக்கள் அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடிகள் பற்றிய கவலைகள் இல்லாமல் அவர்கள் மன அமைதியுடன் கொண்டாட முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. எங்கள் குறிக்கோள், காப்பீட்டை மலிவு மற்றும் அணுகக்கூடியதாக மாற்றுவது, அனைவரையும் பண்டிகைகளை பாதுகாப்பாக அனுபவிக்க அனுமதிப்பதாகும்” என கூறியுள்ளார்.