வீடு கட்டுவது என்பது அனைவரின் கனவாக உள்ள நிலையில், தற்போதுள்ள சூழலில் இருக்கின்ற பணத்தினை வைத்து வீட்டினைக்கட்டுவது என்பது சிரமமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் பல வங்கிகள் 7 சதவீதத்திற்கும் குறைவான வட்டியுடன் வீட்டுக்கடன்களை வழங்கி வருகிறது.
உணவு, உடை, இருப்பிடம் என்பது ஒரு மனிதனின் அத்யாவசியத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக வீடு கட்டுவது என்பது அனைவரின் கனவாகவே இருக்கக்கூடும். அது குடிசை வீடாக இருந்தாலும் சரி, மாடமாளிகையாய் இருந்தாலும் சரி நமக்கென்று ஒரு வீடு, அதுவும் நமக்கு பிடித்தாற்போல் இருக்க வேண்டும் என்று தான் நாம் விரும்புவோம். குறிப்பாக முன்பெல்லாம் வீடு கட்டுவதற்குத் தேவையான கட்டுமானப்பொருட்கள் எல்லாம் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கப்பெற்றன. ஆனால் இன்றைய சூழலில் கட்டுமானப்பொருட்களின் விலைக்கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சமானிய மக்கள் தங்களிடம் உள்ள பணத்தினை வைத்து சொந்த வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகப்போய் விடுமோ? என்ற எண்ணம் எழத்தொடங்கிவிட்டது. இந்நிலையில் தான் பலரின் இந்த வீடு கட்டும் கனவுகளை வங்கிகளின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடன்கள் நிறைவேற்றிவருகிறது.
மேலும் பல வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்களை வழங்கி வருகின்றனர். இதோடு பெண்களின் பேரில் கடன்களை வாங்கும் பொழுது இன்னும் நிறைய சலுகைகளை நம்மால் பெற முடிகிறது. அதிலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் ரியல் எஸ்டேட் தொழில்கள் எல்லாம் நசுங்கிவிட்ட நிலையில், பல வீடுகளை மலிவான விலைக்கு தரக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே வீடு வாங்குபவர்களுக்கும் இது நல்ல தருணமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது பல வங்கிகள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்குறைவாக அதாவது 7 சதவீதத்திற்கும் குறைவாக பல வங்கிகள் வீட்டுக்கடன்களை வழங்கி வருவதால் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்..
வங்கிகளில் வீட்டுக்கடன் மீதான வட்டி விபரங்கள்:
பஞ்சாப் சிந்த் வங்கி – 6.65% -7.60 %
பேங்க் ஆப் பரோடா- 6.75%- 8.25 %
பஞ்சாப் நேஷனல் வங்கி – 6.80 %- 7.70%
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா- 6.85%- 7.30%
யூகோ வங்கி – 6.90%- 7.25%
யூனியன் பாங்க் ஆப் இந்தியா – 6.90% -7.65%
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – 6.95% - 7.65%
பேங்க் ஆப் மகாராஷ்டிரா – 6.90 – 8.40%
கனரா வங்கி – 6.90 – 8.90%
பேங்க் ஆப் இந்தியா – 6.85 – 8.35%
இந்த வட்டி விகிதங்கள் அனைத்தும் கடன் மதிப்பெண்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவேளை கடன் பெறுபவர்களின் கிரெடிட் ஸ்கோரானது அதிகம் இருக்கும் பட்சத்தில், கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வங்கிகளின் மூலம் கடன்களை பெற்று வீடு கட்ட விரும்புவோர் தற்போது வங்கிகள் வழங்கும் குறைந்த வட்டி சலுகைகளின் மூலம் பணத்தினைப் பெற்று பயன்பெற்றுக்கொள்ளவதற்கான நல்ல வாய்ப்பாக உள்ளது.