ITR Forms 2024: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் ஊதியதாரர்களில் பெரும்பாலானோர், ஐடிஆர்-1 படிவத்தை பயன்படுத்துகின்றனர்.
வருமான வரி கணக்கு தாக்கல் 2024:
நடப்பு நிதியாண்டு (FY 2023-24) இன்னும் 50 நாட்களில் முடிவடைகிறது. பொதுவாக, வருமான வரி விதிகளின்படி, ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு நீங்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்காக ஐடிஆர் 1 (ITR-1) தொடங்கி ஐடிஆர் 7 என மொத்தம் 7 படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதில், ஐடிஆர்-1 என்பது வருமான வரி தாக்கல் செய்யும் பெரும்பாலானவர்களால் தேர்வு செய்யப்படும் படிவமாகும். பொதுவாக, சம்பளம் வாங்குபவர்கள் அதைத் தேர்வு செய்கிறார்கள். ITR-1 படிவம் சஹாஜ் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.
ITR-1 படிவத்தை யார் பயன்படுத்தலாம்? (Who is eligible to file ITR-1 form?)
வழக்கமாக வரி செலுத்துவோர்களில் பெரும்பாலானோர் ஐடிஆர்-1 படிவம் மூலம் தங்கள் வருமானம் மற்றும் வரிப் விவரங்களை அரசிடம் சமர்பிக்கின்றனர். சம்பளம், ஈவுத்தொகை, வங்கி வட்டி, ஒரு வீட்டு சொத்து, விவசாயம் மூலம் ஆண்டு வருமானம் ரூ. 5000 (தனிநபர்) கொண்டிருப்பவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஐடிஆர் 1 படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ரூ. 50 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோர் இந்தப் படிவத்தின் மூலம் வருமான விவரங்களை சமர்ப்பிக்கலாம்.
ITR-1 படிவத்தை யார் பயன்படுத்தக்கூடாது? (Who is not eligible to file ITR-1 form?)
- வரி செலுத்துபவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 50 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஐடிஆர்-1 படிவம் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யக் கூடாது.
- மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ஈக்விட்டி பங்குகள், பிற ஆதாரங்களில் வருமானம் ஈட்டுபவர்கள் ITR-1ஐத் தேர்வு செய்யக் கூடாது.
- குதிரைப் பந்தயம், லாட்டரிகள், சட்டப்பூர்வ சூதாட்டம் போன்ற சேவைகள் மூலம் வருமானம் ஈட்டினால், அவர் ITR-1ஐ தாக்கல் செய்ய தகுதியற்றவர்.
- ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துக்களில் இருந்து வருமானம் பெறுபவர்கள் ITR-1 படிவம் மூலம் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
- என்ஆர்ஐ (குடியுரிமை இல்லாத இந்தியர்) ஐடிஆர்-1 ஐ தாக்கல் செய்ய தகுதியற்றவர்.
- வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, வருமான வரிச் சட்டத்தின் 194N பிரிவின் கீழ் டிடிஎஸ் (மூலத்தில் வரிக் கழிக்கப்பட்டது) கழிக்கப்பட்டிருந்தால், அத்தகைய வரி செலுத்துவோர் ITR-1 படிவத்தைப் பயன்படுத்தக்கூடாது.
- இந்து கூட்டுக்குடும்பம் குடும்பம் (HUF), நிறுவனங்கள் ITR-1ஐ தாக்கல் செய்யக்கூடாது.
தகுதி இல்லாதவர்கள் ITR-1 தாக்கல் செய்யப்பட்டால் என்ன ஆகும்?
ITR-1 படிவத்தை தாக்கல் செய்ய தகுதியில்லாத ஒருவர் அந்த படிவத்தின் மூலம் தனது வருமான விவரங்களை தவறுதலாக அறிவித்தால், அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டிஸ் வரக்கூடும். அதில், தவறான படிவம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டு இருக்கும். நோட்டீஸ் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சரியான படிவத்தை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், முதலில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்கு செல்லுபடியாகாது. அதன்பிறகு வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.