நாம் தற்போது பண்டிகை காலத்திற்கு நடுவில் இருக்கிறோம். தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற ஏராளமான பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. இந்தப் பண்டிகை காலத்தில் வழக்கமாகவே நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் இல்லாத சூழலில் பல்வேறு தரப்பினரும் டிஜிட்டல் தங்கத்தின் பக்கம் தங்களது கவனங்களை குவித்தனர். இது பாரம்பரிய தங்கம் வாங்குதல் முறையிலிருந்து சற்று வேறுபடுகிறது. டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? அதில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? போன்றவற்றைத் தெரிந்துகொள்வோம்.
டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன?
டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான முறைதான் இது. தங்க விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை செய்வது பொலவே இங்கும் தங்கம் இருக்கும். தங்கம் வாங்குபவர்கள் பணத்தை செலுத்திய பிறகு அவர்களுக்கு விற்பனையாளர்களிடமிருந்து ஒரு இன்வாய்ஸ் வரும். செலுத்திய தொகைக்கேற்ப தங்கம் அவர்களது அக்கவுண்டிற்கு வந்துவிடும். அதனை வாங்குபவர்கள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அன்றைய சந்தை விலைக்கேற்ப பணமாகவோ அல்லது தங்கமாகவோ விற்பனை செய்யலாம். அல்லது தங்க நாணயமாகவும் நகைகளாகவும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். எவ்வளவு நகை வேண்டுமானாலும் இந்த டிஜிட்டல் தங்கம் முறையில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதற்கு வரைமுறைகள் கிடையாது. ஆனால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்திற்குதான் தங்கம் வாங்க முடியும்.
டிஜிட்டல் தங்கத்தை விற்பது யார்?
இந்தியாவைப் பொறுத்தவரை டிஜிட்டல் தங்கத்தை விற்கும் மூன்று நிறுவனங்கள் உள்ளன. எம்.எம்.டி.சி-பாம்ப் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆக்மண்ட் கோல்ட் லிமிடெட், டிஜிட்டல் கோல்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (சேஃப் கோல்ட்) ஆகிய நிறுவனங்களே அவை. இவை டிஜிட்டல் தங்கத்தை விற்பனை செய்வதற்காக பேடிஎம், கூகுள் பே, அமேசான் பே, போன்பே ஆகிய டிஜிட்டல் தளங்களுடன் டை-அப் வைத்துள்ளன. சமீபத்தில் தனிஷ்க், சென்கோ, கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற பிரபல நகைக்கடைகளும் இதுபோன்ற டை-அப்கள் மூலம் டிஜிட்டல் தங்க விற்பனையைத் துவங்கியுள்ளன.
ஏன் நேரடி நகை வாங்கும் முறையை விட சிறந்தது?
வங்கி லாக்கர்களை சொந்தமாக வைக்காமலேயே தங்கத்தை பாதுகாப்பான முறையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால் சேமிப்பது பற்றியோ பாதுகாப்பு பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. சில நேரங்களில் கடைகளில் தங்கம் வாங்கும்போது அவற்றின் தூய்மை பற்றி கவலை எழுகிறது. ஆனால் டிஜிட்டல் தங்கம் சான்றளிக்கப்பட்ட 24 காரட்களை கொண்டது. மேலும் 999.9 தூய்மையான தங்கம்தான் ஒருவரின் கணக்கில் வைக்கப்படுகிறது. அதேபோல நேரடியாக வாங்கும் நகைகளில் செய்க்கூலி, சேதாரத்திற்காக பெருந்தொகையை செலுத்தவேண்டியிருக்கும். ஆனால் டிஜிட்டல் தங்கத்தில் 3 சதவீத ஜி.எஸ்.டி வரியைத் தவிர வேறு கட்டணங்கள் இல்லை. டிஜிட்டல் தங்கத்திற்கு இந்தியா முழுக்க ஒரே விலைதான். இதனால் தங்கத்தை வாங்குவதும் விற்பதும் முழு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். நீங்கள் நினைக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அப்போதைய மார்க்கெட் விலைக்கு விற்க முடியும். டிஜிட்டல் தங்கம் வேண்டாம், நகைகளாக வாங்கி வீட்டில் சேமிக்க நீங்கள் நினைத்தால் நிறைய தளங்கள் குறைவான டெலிவரி தொகையுடன் உங்கள் வீடுகளுக்கே டெலிவரி செய்கின்றன. டிஜிட்டல் தங்கத்தை மிகச்சிறிய அளவில்கூட வாங்கும் வசதி இருக்கிறது. ஒரு ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். 0.1 கிராம் அளவுக்கு கூட தங்கம் வாங்கலாம். மற்றவர்களுக்கு பரிசளிக்கும் கிஃப்டிங் ஆப்ஷன்களையும்
கொண்டுள்ளது.மொபைல் இருந்தால் போதும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
பாதுகாப்பானதா?
விற்கும் நிறுவனங்கள் பாதுகாவலனாக (custodian) செயல்படுகின்றன. தரம் மற்றும் செயல்பாட்டைக் கண்காணிக்க ஒரு அறங்காவலர் trustee நியமிக்கப்படுகிறார். வாடிக்கையாளர் சார்பாக விற்பனையாளர் காப்பீடு செய்து தங்கம் வால்ட்களில் சேமிக்கப்படுகிறது.
ரிஸ்க்
தற்போது, டிஜிட்டல் தங்கம் நேரடியாக எந்த ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் இல்லை. ரிசர்வ் வங்கி அல்லது செபி அரசாங்க ஒழுங்குமுறை இல்லாததால் இந்த புதிய முறைக்கு சில ரிஸ்க்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.