Income Tax Rules: இந்தியாவில் தனிநபரின் வருமானத்திற்கு ஏற்ப பல்வேறு அடுக்குகளாக வரி வசூலிக்கப்படுகின்றது.


வரி வசூல் முறை:


வரியை சேமிப்பதற்கான சீசன் தொடங்கிவிட்டது. அதிக வருவாய் ஈட்டும் மக்கள் வரியைச் சேமிக்க தேவையான வழிகளை தேட தொடங்கியுள்ளனர். மத்திய அரசின் புதிய வரி விதிப்பின்படி ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  பழைய வரி விதிப்பு முறையின்படி,  ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே உங்கள் ஆண்டு வருமானம் இந்த இரண்டு வரம்புகளை விட அதிகமாக இருந்தால் நீங்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.


வரி அடுக்குகள்:


வருமான வர் அடுக்குகளின்படி அதிக வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். பழைய வரி விதிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்று வருமான வரி விதி கூறுகிறது. தொடர்ந்து 2.5-5 லட்சம் வருமானத்திற்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. ரூ.5-10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகிதமும், ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வருவாய்க்கு 30 சதவிகித வரியும் விதிக்கப்படுகிறது.


ரூ. 10.50 லட்சம் வருமானத்தில் கூட வரி சேமிக்க முடியும்..!


வரி அடுக்குகளின் விதிகளின்படி, உங்களது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருந்தால் 30 சதவிகிதம்  வரி செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் விரும்பினால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை. அதோடு, உங்களது ஊதியம் ரூ.10.50 லட்சமாக இருந்தாலும், முதலீடு செய்து விலக்குகளைப் பயன்படுத்தி, வரி முழுவதையும் சேமிக்கலாம். அதன்படி, பழைய வரிவிப்பு முறையில் எப்படி முழுவரி விதிப்பையும் தவிர்க்கலாம் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


ரூ. 10.50 லட்சம் வருமானத்தில் வரியைச் சேமிப்பது எப்படி?



  • நிலையான விலக்காக ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதனடிப்படையில் ரூ.10 லட்சத்துக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்.

  •  PPF, EPF, ELSS, NSC போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரியைச் சேமிக்கலாம். இதன் மூலம்,  ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சத்தை கழித்தால், தற்போது ரூ.8.5 லட்சம் மட்டுமே வரியின் கீழ் வரும்.

  • தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) நீங்கள் தனியாக ஆண்டுதோறும் ரூ. 50,000 வரை முதலீடு செய்தால், பிரிவு 80CCD (1B) இன் கீழ் கூடுதலாக ரூ. 50 ஆயிரம் வருமான வரியைச் சேமிக்கலாம். தற்போது ரூ.8 லட்சம் மட்டுமே வரி வரம்பிற்குள் அடங்கும்.

  •  வீட்டுக் கடன்/வாடகை விட்டிற்கு, வருமான வரியின் 24பி பிரிவின் கீழ் அதன் வட்டியில் ரூ.2 லட்சம் வரை வரிச் சேமிப்பை மேற்கொள்ளலாம். தற்போதைய மொத்த வரி வருமானம் ரூ.6 லட்சமாக இருக்கும்.

  • வருமான வரியின் 80டி பிரிவின் கீழ் மருத்துவ பாலிசி எடுப்பதன் மூலம் ரூ.25 ஆயிரம் வரை வரியைச் சேமிக்கலாம். இந்த உடல்நலக் காப்பீட்டில் உங்கள் பெயர், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்கள் இருக்க வேண்டும். இது தவிர உங்கள் பெற்றோர் பெயரில் மருத்துவ காப்பீடு வாங்கினால் ரூ.50,000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இதனை தொடர்ந்து ரூ.5.25 லட்சம் மட்டுமே வரி வருவாயாக இருக்கும்.

  • ஏதேனும் நிறுவனத்திற்கும் நன்கொடை அளித்தால், ரூ.25,000 வரை வரிச் சலுகையைப் பெறலாம். வருமான வரியின் 80ஜி பிரிவின் கீழ், நன்கொடையாக வழங்கப்படும் தொகைக்கு ரூ.25,000 வரை வரி விலக்கு கோரலாம். அப்படி நடந்தால் உங்கள் வருமானம் ரூ.5 லட்சம் வரம்பிற்குள் வரும். வருமான வரி விதிகளின்படி, 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு பழைய வரி முறையின் கீழ் வரி செலுத்த வேண்டியதில்லை.


மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நீங்கள் உங்களது வரிச்சுமையில் பெரும்பகுதியை குறைக்கலாம். அதோடு, எதிர்காலத்திற்கான சேமிப்பையும் பெருக்கலாம்.