Income Tax: வருமான வரி விலக்குகளை பெறும் நோக்கில் போலி வீட்டு வாடகை ரசீதுகளை சமர்பிப்பவர்களை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வருமான வரித்துறை கண்டுபிடிக்கிறது.


வருமான வரித்துறை:


 ஒவ்வொரு வரி செலுத்துபவரும் வருமான வரிச் சட்டத்தின் வரம்பிற்குள் இருந்து வரியைச் சேமிக்க முயற்சி செய்யலாம். பழைய வரிவிதிப்பு முறை அல்லது புதிய வரி விதிப்பு முறை என எதுவாக இருந்தாலும், இரண்டுமே வரியைச் சேமிக்க பல வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் வரியைச் சேமிக்க தவறான வழிகளைக் கையாள்பவர்கள் தற்போது சிக்கலில் உள்ளனர். உதாரணமாக, சிலர் போலி ரசீதுகள் மூலம் வரிக் கணக்கு தாக்கல் செய்கிறார்கள். வருமான வரித்துறையை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவு யுகத்தில், வருமான வரித்துறை இதுபோன்ற போலி முறைகளைப் பிடிக்க மிகச் சிறந்த நுட்பங்களைக் கொண்டுள்ளது. அதன்படி,  வருமான வரித் துறை போலி வாடகை ரசீதுகளை எப்படிப் பிடிக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:


செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி வருமான வரித்துறை தற்போது போலி வாடகை ரசீதுகளை கண்டுபிடித்து வருகிறது. இது படிவம்-16, AIS படிவம் மற்றும் படிவம்-26AS ஆகியவற்றை இணைப்பதன் மூலம் செய்கிறது.


செயற்கை நுண்ணறிவு சரிபார்ப்பு:


வாடகைக்கு பெறப்பட்ட HRA க்கு வரி விலக்கு கிடைக்கும். ஆனால் இதற்கு நீங்கள் சரியான வாடகை ரசீதைக் காட்ட வேண்டும். இதனை சிலர் தவறாக பயன்படுத்துவதால்,  போலி ரசீதுகளைக் காட்டி வரியைச் சேமிக்கிறீர்களா என்பதைக் கண்டுபிடிக்க வருமான வரித் துறை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.


HRA விதிகள் என்ன?


HRA வை விலக்காகக் காட்ட, முதலில் உங்கள் நிறுவனம் உங்களுக்கு HRA செலுத்த வேண்டும். ஆண்டு முழுவதும் செலுத்தப்பட்ட வாடகை  1 லட்சத்திற்கு மேல் இருந்தால், வீட்டு உரிமையாளரின் பான் எண்ணையும் கொடுக்க வேண்டும். AIS படிவத்தில் பதிவுசெய்யப்பட்ட நில உரிமையாளரின் PAN தொடர்பான பரிவர்த்தனைகளுடன் வருமான வரித் துறை நீங்கள் கூறிய HRAஐப் பொருத்துகிறது. குறிப்பிடப்பட்ட தொகை மற்றும் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளில் ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், துறை உங்களுக்கு நோட்டீஸை அனுப்பலாம்.


ரூ.1 லட்சத்துக்கும் குறைவான வாடகைக்கு பிரச்னை இல்லை..!


ஒரு வருடத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வாடகை செலுத்தினால், வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை வழங்க வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வருமான வரித்துறை ரூ. 1 லட்சம் வரையிலான HRA கோரிக்கைகளை விசாரிப்பதில்லை.


AI மூலம் சிக்கும் மோசடிகள்:


எச்ஆர்ஏவைப் பயன்படுத்திக் கொள்ள பலர் மோசடி முறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஏனென்றால், அதிக வாடகை காட்டினால், அந்தத் தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இந்த பேராசையால் சிலர் பிடிபடக்கூடாது என நினைத்து போலி ரசீதுகளை சமர்ப்பித்து வருகின்றனர். ஆனால், வருமான வரித் துறையின் AI அமைப்புகள் இப்போது இதுபோன்ற மோசடிகளைப் பிடிக்க மிகவும் திறமையாகிவிட்டன.  இதுபோன்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.