அவசரகால நிதி: சில புரிதல்கள்


கொரோனா அனைவருக்கும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை மட்டும் வழங்கவில்லை. நிதி சார்ந்த விழிப்புணர்வையும் வழங்கி இருக்கிறது. கொரோனா பல தொழில்களை பாதித்திருக்கிறது. அதனால் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவது சம்பளத்தை குறைப்பது என பல விஷயங்கள் நடப்பதால் நிதி சார்ந்த விழிப்புணர்வும் மக்களுக்கு உருவாகி வருகிறது. இரண்டாம் வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியுமா? கிடைக்கும் நேரத்தை வைத்து எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என யோசிக்க தொடங்கிவிட்டனர். பணம் சம்பாதிப்பது முக்கியம். அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்


இங்கு நாம் பார்ப்பது அவசர தேவைக்கான நிதி என்றால் என்ன, எவ்வளவு தேவைப்படும் என்பது மட்டுமே.


எது அவசர செலவு?


எது அவசர செலவு என்பதில் தெளிவு இருந்தால்தான் நிதியை எப்படி பயன்படுத்த முடியும் என்னும் புரிதல் இருக்கும். திடீரென மருத்துவ செலவுகள், அவசர தேவைக்கான குடும்பத்துடன் பயணம் செல்லுதல், இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்பு, விபத்து மூலம் ஏற்படும் மருந்து மற்றும் வாகனம், பொருட்களுக்கான செலவுகள், தீடிரென வீட்டில் முக்கியமான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுதாவது என நம் கட்டுப்பாட்டில் இல்லாத, திட்டமிடமுடியாத , தவிர்க்க முடியாத செலவுகள்தான் அவசர செலவுகள்.


திருமணத்துக்கு செல்லுதல், அதற்கான கிப்ட் வாங்குதல், சுற்றுலா செல்லுதல், அடிக்கடி செல்போன் மாற்றுதல் போன்றவற்றை அவசர செலவுகள் என்று சொல்ல முடியாது.


இந்த நிதியை உருவாக்குவதற்கு காரணம், அவசர காலத்தில் எதோ அசம்பாவிதம் அல்லது தவிர்க்க முடியாத தேவை காரணமாக மன அழுத்தம் இருக்கும். இந்த சமயத்தில் நிதி சார்ந்த அழுத்தம் இருக்க கூடாது என்பதற்காகதான் அவசர கால நிதியை உருவாக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.




எவ்வளவு தேவைப்படும்?


இதற்கு ஏதும் தனிப்பட்ட ஃபார்முலா கிடையாது. சம்பந்தபட்டவரின் வருமானம் மற்றும் குடும்ப அமைப்பை பொறுத்து இருக்கும். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இருந்தால் போதுமானது. ஒருவர் மட்டும் வேலைக்கு சென்றால் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கவேண்டும். அதுவும் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்லும் சூழலில் நான்கு நபர்களுக்கு மேல் அவரை சார்ந்து இருக்கும் பட்சத்தில் 12 மாத சம்பளத்தை அவசர தேவையாக ஒதுக்கீடு செய்வது அவசியமாகும்.


எதில் இருக்க வேண்டும்?


மருத்துவ தேவைக்காக, அவசர தேவைக்காக அவசரகால நிதி இருக்கிறதே என நினைத்து காப்பீடு இல்லாமல் இருக்க கூடாது. குடும்பத்துக்கு மருத்துவ காப்பீடு என்பது அவசியமானது. அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் இருந்தால் லட்ச ரூபாய் எல்லாம் சாதாரணமாக செலவாகும். அதேபோல அனைத்து செலவுகளுக்கும் காப்பீடு கிடைக்காது. அதனால் அவசர கால நிதி இருக்கிறது என்பதற்காக காப்பீடு எடுக்கத்தேவையில்லை என்னும் புரிதல் தவறானது.


இந்த தொகையை எப்படி வைத்திருக்க வேண்டும். நிதி என்றவுடன் நாம் முதலீடு என்றே புரிந்துகொள்கிறோம். ஆனால் அவசர கால நிதியை முதலீட்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. நாம் சேர்த்து வைக்கும் நிதி என்பது உடனடியாக எடுத்துக்கொள்வதுபோல இருக்கவேண்டும். அதனால் வங்கியில் எளிதில் எடுக்க முடிகிற டெபாசிட், லிக்விட் பண்ட், ஓவர் நைட் பண்ட் என பல வழிகளில் பணத்தை வைத்திருக்கலாம். அதாவது நினைத்தவுடன் ஒரிரு நாளில் பணம் நம் வங்கிக்கு வருவதுபோல இருக்கவேண்டும்.


தங்கம்?


கிடைக்கும் தொகையை தங்கமாக சேமித்து வைக்கிறேன். அவசர தேவைக்கு தங்கத்தை பயன்படுத்திக்கொள்கிறோம் என சிலர் நினைக்கலாம். தங்கத்தில் முதலீடு செய்வது என்பது வேறு. அவசர தேவைக்கு பயன்படுத்துகிறோம் என்பது வேறு. தங்கத்தில் முதலீடு செய்யும்போது செய்கூலி, சேதாரம் என பெரும் தொகை வீணாகும். அதேபோல தங்கத்தை அடகு வைக்கும்போது அதற்கு வட்டி கட்ட வேண்டும். 


அதனால் அவசரத்துகாக பிரத்யேகமாக நிதியை சேமித்துவைப்பது அவசியம். இந்த தொகையை மூலம் நாம் வருமானம் பெருவது நோக்கமல்ல. நிதி பாதுகாப்பாக இருக்க வேண்டும், எளிதில் எடுக்க முடிவதாக இருக்கவேண்டும். அவசர கால நிதியை உருவாக்குவது குறித்து திட்டமிடுவதற்கான நேரம் வந்துவிட்டது.