TDS Status: சம்பளம் உள்ளிட்ட வருமான ஆதாரங்களுக்காக, கழிக்கப்படும் டிடிஎஸ் தொகையானது பயனாளிரின் பான் கார்டு கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.


டிடிஎஸ் என்றால் என்ன?


டிடிஎஸ் பற்றிய சந்தேகம் என்பது பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. தற்போதைய காலகட்டத்தில் தனிநபருக்கு பலதரப்பட்ட வருமான ஆதாரங்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், அவர்களது வருமானத்திலிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறது. வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெறலாம். ஆனால்,  வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை இழக்க நேரிடும்.


பான் கார்டில் டெபாசிட்:


ஃப்ரீலான்சிங் செய்பவர்கள் வருமான வரி, டிடிஎஸ் தொடர்பான விஷயங்களை மிகவும் கடினமானதாக கருதுகின்றனர். அதிகப்படியான வேலை மற்றும் அழுத்தமான மனநிலை காரணமாக, சிலர் இந்த விஷயத்தைப் பற்றி அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக தான், உங்களது வருமானத்தில் TDS பிடித்தம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை, உங்கள் பான் கார்ட் மூலம் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட வரம்பை கடந்த பிறகு கமிஷன், ஊதியம் மற்றும் பிற வருமான ஆதரங்களின் மீது வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியின் ஒரு பகுதி மட்டும் தனியாக கழிக்கப்படுகிறது. அந்த கழிக்கப்பட்ட தொகை உங்கள் பான் கார்டு கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.


தொகையை திரும்பப் பெறுதல்:


நீங்கள் வருமான வரி விதிப்புக்குள் வரவில்லை என்றால், இந்த டிடிஎஸ் பணத்தை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள். இதற்காக நீங்கள் வருமான வரிக்கணக்கை  தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆரில் நீங்கள் பான் எண்ணை உள்ளிட்டவுடன், உங்களின் முழு பதிவும் அதனுடன் இணைக்கப்படும். நீங்கள் வரி அடுக்குக்கு வெளியே இருந்தால், TDS தொகை திரும்பப் பெறப்படும்.


பான் கார்டு மூலம் டிடிஎஸ் நிலையை சரிபார்க்கலாம்:


1961 இன் வருமான வரிச் சட்டத்தின் கீழ் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதற்கான ஒரு வழிமுறை TDS ஆகும். மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (CBDT) நிர்வகிக்கப்படும் TDS வரி தணிக்கைகளை மேற்கொள்ளும் போது பயனுள்ளதாக இருக்கும்.


பான் கார்டு மூலம் டிடிஎஸ் நிலையை சரிபார்ப்பது எப்படி? 


பான் கார்டைப் பயன்படுத்தி டிடிஎஸ் நிலையைச் சரிபார்க்க, கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.



  • www.tdscpc.gov.in/app/tapn/tdstcscredit.xhtml என்ற இணையதள முகவரியை அணுகவும்

  • பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் வெரிஃபிகேஷன் எண்ணை பதிவிடவும்

  • 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்

  • PAN மற்றும் TAN விவரங்களை உள்ளிடவும்

  • நிதி ஆண்டு மற்றும் காலாண்டு மற்றும் வருமான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

  • 'செல்' என்பதைக் கிளிக் செய்யவும்

  • தேவையான விவரங்கள் திரையில் காட்டப்படும்


படிவம் 26ஐ பயன்படுத்தி TDS கிரெடிட்டை அணுகுவது எப்படி?


Form26AS ஐப் பயன்படுத்தி TDS கிரெடிட்டைச் சரிபார்க்க, கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.



  • www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதள முகவரியை அணுகவும்

  • விவரங்களை பதிவு செய்யுங்கள்

  • ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயனராக இருந்தால், நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள்நுழையவும்

  • 'மை அக்கவுண்ட்' என்பதற்குச் செல்லவும்

  • 'பார்ம் படிவம் 26AS' என்பதைக் கிளிக் செய்யவும்

  • 'ஆண்டு' மற்றும் 'PDF வடிவம்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

  • கோப்பைப் பதிவிறக்கவும்

  • கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட அந்த கோப்பை, பான் கார்டின்படியான உங்களது பிறந்த தேதி மூலம் திறக்க முடியும்


PAN மற்றும் படிவம் 26AS மூலம் TDS நிலையை அறிந்துகொள்வதைத் தவிர, நெட் பேங்கிங் போர்ட்டலைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் TDS-ஐ ஆன்லைனில் பார்க்கலாம். இருப்பினும், அதற்கு, பான் எண்ணை நெட் பேங்கிங் போர்ட்டலுடன் இணைக்க வேண்டும்.