EPF Interest rate: 2023-24 நிதியாண்டின் வருங்கால வைப்புநிதிக்கான வட்டித்தொகை எப்போது, கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பி.எஃப்., பணத்திற்கான வட்டி விகிதம்:


2023-24 நிதியாண்டிற்கான EPF வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளது.  அந்த பதிவில், ”ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காக அறிவிக்கப்பட்ட வட்டி விகிதம்,  சமீப ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக அதிகம். மற்ற GPF மற்றும் PPF போன்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை விட அதிகமாக உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.






பணியாளர்களுக்கு இழப்பு இன்றி நடவடிக்கை


ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மற்றொரு டிவிட்டர் பதிவில், ”2023-24 நிதியாண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டியை 8.25 சதவிகிதமாக நிர்ணயித்து, ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளது. பொதுவாக நிதியாண்டு முடிந்த உடனேயே, அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் EPF இன் வட்டி விகிதம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


திருத்தப்பட்ட வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போதுள்ள பயனாளர்கள் மற்றும் கடந்த நிதியாண்டுடன் தங்களது பங்களிப்பை இறுதி செய்த பயனாளர்களுக்கும் 8.25 சதவிகித வட்டி வழங்கப்பட உள்ளது. 2023-24 நிதியாண்டு இறுதியில் மற்றும் 2024-25 நிதியாண்டின் தொடக்கத்தில் இறுதி செட்டில்மெண்டை பெற விரும்புபவர்களுக்கும், எந்த இழப்பும் இன்றி திருத்தப்பட்ட வட்டி விகிதத்தில் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 10, 2023 அன்று, மத்திய அறங்காவலர் குழு 2023-24 நிதியாண்டிற்கான EPF விகிதத்தை 8.25 சதவிகிமாக பரிந்துரைத்தது. 2023-24 நிதியாண்டிற்கான EPF விகிதம் 8.25 சதவிகிதம் குறித்து அப்போதைய தொழிலாளர் அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதால், வட்டி தொகை எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு EPF உறுப்பினர்கள் இடையே எழுந்துள்ளது.