EPFO UAN for ELI scheme: வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
UAN & ஆதார் இணைப்பதற்கான அவகாசம்:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. முன்னதாக இந்த அவகாசம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவுற இருந்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “அன்புள்ள முதலாளிகளே, UAN செயல்படுத்தல் மற்றும் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் வரும் டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் பலனைப் பெற, நடப்பு நிதியாண்டில் சேர்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும், சமீபத்திய இணைந்தவர்கள் தொடங்கி அனைவரும் இதைச் செய்வதை உறுதிசெய்யவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கம் என்ன?
மத்திய அரசு பட்ஜெட் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ELI திட்டமானது வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும், முதலாளிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் மூன்று கூறுகளை (A, B, மற்றும் C) கொண்டுள்ளது. அதன்படி,
திட்டம் A : முறையான துறையில் முதல் முறையாக பணியாளர்களாக நுழையும் நபர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை (ரூ 15,000 வரை) நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூலம் மூன்று தவணைகளில் பெறுவார்கள். மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கும் பணியாளர்கள் தகுதியானவர்கள்.
திட்டம் B : உற்பத்தித் துறையில் வேலை உருவாக்கத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், முதல் நான்கு வருட வேலைக்கான EPFO பங்களிப்புகளுக்கு இணையான ஊக்கத்தொகையை ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுக்கு வழங்குகிறது.
திட்டம் C : அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தும் இந்தத் திட்டம், மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை சம்பாதிக்கும் ஒவ்வொரு புதிய ஊழியருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை திருப்பிச் செலுத்துகிறது.
அவகாசம் நீட்டிக்கப்பட்டது ஏன்?
ELI திட்டமானது முறையான வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த காலக்கெடு நீட்டிப்பு, அதிகமான பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சிகளில் இருந்து பயனடையவும் அனுமதிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், ELI திட்டம் இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வேலை வாய்ப்புகளை கணிசமாக உயர்த்துகிறது மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.