GST Slabs Reform: ஜிஎஸ்டியில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 4 அடுக்குகள் வெறும் இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டியில் பெரிய மாற்றம்:

திபாவளிக்கான பெரிய பரிசாக ஜிஎஸ்டியில் பெரிய சீர்திருத்தம் செய்யப்படும் என, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில், தற்போது நான்கு அடுக்களில் வசூலிக்கப்படும் வரியானது இனி வெறும் இரண்டு அடுக்குகளில் மட்டுமே வசூலிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இனி 5 மற்றும் 18 சதவிகித வரிகள் மட்டுமே விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பரிசீலனையின்படி, 28 சதவிகித வரி அடுக்கில் உள்ள 90 சதவிகித பொருட்கள் 18 சதவிகித வரி அடுக்குகளுக்குள் நுழைய உள்ளன. அதேநேரம், 12 சதவிகித வரி அடுக்கில் உள்ள 99 சதவிகித பொருட்கள் 5 சதவிகித வரி அடுக்கிற்கு கொண்டு செல்லப்பட உள்ளனவாம்.

சிறப்பு 40% வரி பிரிவு:

ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு சிறப்பு வரிப்பிரிவாக 40% வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது.  இதில் புகையிலை, சிகரெட் மற்றும் குட்கா ஆகிய பொருட்கள் அடங்கக் கூடும். அதிகப்படியான வரியான 40 சதவிகிதப் பிரிவில் 5 முதல் 7 பொருட்கள் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், குளிர்சாதன பெட்டி, ஏசி மற்றும் வாஷிங் மிஷின் ஆகியவை இந்த பட்டியலில் இருந்து விலக்கப்படலாம். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை சீர்திருத்தப்பட்டாலுமே, பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து அந்த வரம்பிற்கு வெளியேயே நீடிக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதற்கான வரி குறையாது?

வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்ற அதிக உழைப்பு மிகுந்த மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருட்கள் மீதான வரி விகிதங்கள் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடரக்கூடும். மொத்த வரிவிதிப்பு தற்போதுள்ள சூழலிலேயே 88 சதவிகிதம் வரை இருக்கும். முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நுகர்வுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வரிவிதிப்பு மாற்றம் காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜிஎஸ்டி வரி வருவாய்:

மத்திய நிதியமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரி மாற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அரசின் தரவுகளின்படி, மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 67 சதவிகிதம் 18 சதவிகித வரி விகிதத்தில் உள்ள பொருட்களிலிருந்து கிடைக்கிறது. தொடர்ந்து 28, 12 மற்றும் 5 சதவிகிதம் வரி அடுக்குகளிலிருந்து முறையே  11, 5 மற்றும் 7 சதவிகித மொத்த ஜிஎஸ்டி வருவாய் பதிவாகிறது.

எப்போது அமலுக்கு வரும்?

ஜிஎஸ்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களை அங்கீகரிக்க செப்டம்பர் அல்லது அக்டோபரில், மாநில நிதியமைச்சர்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூடும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பொதுவான பயன்பாட்டுப் பொருட்களின் பல ஜிஎஸ்டி விகிதம் குறைந்து அவை மலிவாக மாறும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். இது சாதாரண மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கும் நேரடியாகப் பயனளிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 8 ஆண்டுகளை பூர்த்தி செய்ய உள்ள வேளையில், இந்த முக்கிய சீர்திருத்தம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.