மேற்கத்திய நாடுகளில் விடுமுறை காலம் தொடங்க உள்ள நிலையில், பொருளாதார மந்தநிலை ஏற்பட உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, பெரிய செலவு செய்ய திட்டமிட்டிருந்தால் அதை தள்ளி போடுங்கள் என உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரும் அமேசானின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் அட்வைஸ் வழங்கி இருந்தார்.
இதற்கு மத்தியில், பெரு நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமாக இருப்பது மெடா நிறுவனம்.
சமீபத்தில், 13 சதவிகித தொழிலாளர்களை அதாவது 11,000 பேரை இந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது. 18 ஆண்டு கால வரலாற்றில் இத்தனை பேர் பணியில் இருந்து தூக்கப்படுவது இதுவே முதல்முறை.
மெட்டாவை தொடர்ந்து, ட்விட்டர், பேஸ்புக், அமேசான் இந்தியாவில் பைஜூஸ் என பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் தற்போது 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதுடன் 250 ஊழியர்களை புதிதாக பணியமர்த்த முடிவு செய்துள்ளது ஓயோ நிறுவனம்.
இந்நிலையில், வரும் மாதங்களில், கார்ப்பரேட் நிர்வாகிகள் உள்பட சுமார் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பெரும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 16 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
அதில், விநியோகத் ஊழியர்கள், பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. கடந்த மாதம், தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு செய்தியில்,"அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கமாக இருந்திருக்கும்.
இருப்பினும், இப்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அமேசான் தனது மேலாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியாளர்களிடையே செயல்திறன் தொடர்பான சிக்கல்களைக் கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்படும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாத நோட்டீஸ் அனுப்பப்படும். நிறுவனத்தின் ஒப்பந்தங்களின்படி பணிநீக்க ஊதியம் வழங்கப்படும். பணி நீக்கம் குறித்து தகவல் வெளியானவுடன் ஊழியர்கள் அனைவரும் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெருந்தொற்று காலத்தில், அதிகபடியான ஆட்கள் பணியில் சேர்க்கப்பட்டதாகவும் அதன் காரணமாக தற்போது செலவு குறைக்கும் முயற்சியாக ஆட் குறைப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.