2021-ம் ஆண்டினை ஐபிஓகளின் ஆண்டாக குறிப்பிடலாம். பெரும் எண்ணிக்கையிலான ஐபிஓகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. ஒரு ஐபிஓவின் வெற்றி, வேறு நிறுவனங்களை ஐபிஓ கொண்டுவர ஊக்கமாக இருந்தது. அதேபோல ஒரு ஐபிஓவின் தோல்வி மற்ற நிறுவனங்களின் ஐபிஓவை தள்ளிவைக்கும். இதுதான் தற்போது நடந்திருக்கிறது.


பேடிஎம் ஐபிஓவின் மிகப்பெரிய தோல்வி அடுத்து வரும் பேமெண்ட் நிறுவனங்களின் ஐபிஓவை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. வியாழக்கிழமை வர்த்த்தகத்தில் இந்த பங்கு 17 சதவீதம் அளவுக்கு  உயர்ந்தாலும் வெளியீட்டு விலையை இன்னும் தொடவில்லை. 2150 ரூபாய்க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கு தற்போது 1752 ரூபாயில் வர்த்தகாமாகிறது. ஆனால் 1271 ரூபாய் வரைக்கும் கூட இந்த பங்கின் சரிவு இருந்தது.


இந்த பங்கில் முதலீடு செய்த அனைத்து முதலீட்டாளர்களுக்கு 40 சதவீதம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலக்கத்தில் இருக்கின்றன.


தள்ளிப்போகும் மொபிகுவிக்!


கிட்டத்தட்ட பேமெண்ட் பிரிவில் செயல்பட்டுவரும் முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனமான மொபிக்விக் ஐபிஓ வெளியிடும் முடிவை தள்ளி வைத்திருக்கிறது. கடந்த ஜூலையில் செபியிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்தது. அக்டோபரில் ஐபிஒ வெளியிட செபி அனுமதி கொடுத்தது. இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ ஒட்டுமொத்த செண்டிமெண்டையும் மாற்றிவிட்டதால் ஐபிஓ வெளியிட வேண்டாம் என முதலீட்டாளர்கள் கருதுவதாக தெரிகிறது.


தற்போது ஐபிஓ வெளியிட்டால் சிறு முதலீட்டாளர்களிம் வரவேற்பு கிடைக்காது. அதேசமயத்தில் நிறுவன முதலீட்டாளர்களும் நிராகரித்துவிடுவார்கள். தற்போதைய சந்தை மதிப்பில் வெளியிட்டால் நிறுவனத்தின் மதிப்பு 30 சதவீதம் வரை சரியக்கூடும் என முதலீட்டாளர்கள் கருதுவதாக தெரிகிறது.


கடந்த ஜூலையில் அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி முதலீடு செய்தது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 70 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ஒரு பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் பட்டியலிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரூ. 1900 கோடி அளவுக்கு நிதி திரட்டுவதற்கு செபி அனுமதி கொடுத்திருந்தது. இதில் 1500 கோடிக்கு புதிய பங்குகள் மூலமாகாவும், 400 கோடி ரூபாய் ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள் விற்பதன் மூலமாகவும் திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருந்தது.




நய்கா ஏன் சரியவில்லை?


பேடிஎம் கடுமையாக சரிந்திருக்கும் போது சமீபத்தில் பட்டியலான மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனமான நய்கா ஏன் சரியவில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு இயல்பாக தோன்றும் கேள்வி. கிட்டத்தட்ட ஐபிஓ வெளியாகி சுமார் 100 சதவீதம் அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது.


நய்கா என்பது பேஷன் துறையில் செயல்பட்டுவருகிறது என்பதால் லாப வரம்பு அதிகம். ஆனால் பேடிஎம் பின் டெக் பிரிவில் செயல்படுகிறது. தவிர குறைவான லாப வரம்பில் செயல்பட வேண்டும். மேலும் பல ஒழுங்குமுறை ஆணையங்களின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் செயல்பட வேண்டி இருக்கும். இதுவரை லாபம் ஈட்டாத பேடிஎம் அடுத்த சில ஆண்டுகளுக்கும் லாபம் ஈட்டும் வாய்ப்பு குறைவு என்பதையே சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 2019-ம் ஆண்டு நிறுவனம் லாப பாதைக்கு செல்லாமல் ஐபிஓ வெளியிட மாட்டோம் என விஜய் சேகர் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால் இனி சில ஆண்டுகளுக்கும் லாபம் என்பது சாத்தியமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.


ஆனால் நய்கா லாபம் ஈட்டும் ஒரு சில ஸ்டார்ட் அப்களில் இதுவும் ஒன்று. நிறுவனதை லாபம் ஈட்டாமல் ஐபிஓ கிடையாது என்பது நய்கா நிறுவனர் பல்குனி நாயர் உறுதியாக இருந்தார். அவர் கூறியதை போலவே லாபம் ஈட்டிய பிறகே ஐபிஓ கொண்டு வந்தார். தவிர பெரிய அளவுக்கு போட்டியோ, விதிமுறைகளோ இல்லாத நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்களிடம் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.


பேடிம் ஸ்டார்களையும் விளம்பரங்களையும் நம்பி இருக்கிறது. ஆனால் நய்கா டிஜிட்டல்லை நம்பி இருக்கிறது. டிஜிட்டல் மற்றும் influencer மூலமாகவேக பிராண்டினை வளர்த்துவருகிறது. அழகு சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்பதால் பாலிவுட் நட்சத்திரங்கள் காத்தரீனா கைப், அலியா பட், ஜானவி கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். புராடக்ட் அறிமுக நிகழ்ச்சிகளில் இவர்களின் பங்களிப்பும் இருப்பதால் மேலும் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடிகிறது.


இது குறித்து பொருளாதார பேராசிரியரிடம் பேசியது நினைக்கு வந்தது. அனைவருக்கும் புரியும் படி சொன்னால் பேடிஎம் ஒரு ரூபாய் சம்பாதிக்க 2 ரூபாய் அளவுக்கு செலவு செய்கிறது என கூறினார். பேடிஎம் காரணமாக ஒட்டுமொத்த ஃபின் டெக் துறையும் கலக்கத்தில் இருக்கிறது.