சீன முதலீட்டில் இயங்கும் இந்திய நிறுவனமான பேடிஎம் இந்தியாவில் மிகப்பெரும் ஐபிஓ-வை வெளியிட்டுச் சாதனை படைக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை இந்திய பங்குச்சந்தை வாரியமான செபி அண்மையில் வெளியிட்டுள்ளது. 


இதன்படி மொத்தம் 16000 ஐபிஓக்களை வெளியிடும் முதல் இந்திய நிறுவனமாக பேடிஎம் பட்டியலில் இடம்பெற உள்ளது. நவம்பர் மாதத் தொடக்கத்தில் இதற்கான பணிகளை அந்த நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் தலைவர் விஜய்சேகர் வெளியிட்டுள்ளார். 


இதன்மூலம் பேடிஎம்-மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதற்கான வாய்ப்பை இந்த ஒப்புதல் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அண்மையில் அதிக பங்குகளுடன் ஐபிஓ வெளியிடுவதில் முன்னிலையில் இடம்பெற்ற சொமாட்டோ நிறுவனத்துக்கு அடுத்து பங்குச் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இரண்டாவது ஸ்டார்ட் அப் நிறுவனமாக பேடிஎம் தற்போது இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 


அண்மைக்காலமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல தொடர்ச்சியாக ஐபிஓ வெளியிட்டுவருகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ரெஷ்வொர்க்ஸ் கடந்த மாதம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் தனது ஐபிஓக்களை விற்றது கவனிக்கத்தக்கது. 






முன்னதாக,அமெரிக்காவின் Nasdaq பங்குச்சந்தையில் பிரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஐபிஒ மிகப்பெரிய முதலீடுகளை பெற்றது. பிசினஸ் சாஃப்ட்வேர் நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ், செப்டம்பர் 22-ஆம் தேதி நாஸ்டாக்கில் தனது வணிகத்தைத் தொடங்கியது. நிறுவனத்தின் லிஸ்ட்டிங் விலை ஷேருக்கு 36$-ஆக இருந்தது



அதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதன் நிறுவனர் கிரீஷ் மாத்ரூபூதம், "நிறுவனத்தின் அநேக பங்குகளை பணியாளர்கள் வாங்கியுள்ளனர். இதன் மூலம், பிரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கோடிஸ்வரர்களாக மாறியுள்ளனர். இதில், 30 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 70 ஆக உள்ளது" என்று தெரிவித்தார். 


முன்னதாக, அமெரிக்க பங்குச்சந்தையில் பங்குகள் விற்பனை மூலம் நிதி திரட்ட முடிவு செய்த இந்நிறுவனம், அந்த திட்டத்திற்கு  'சூப்பர் ஸ்டார்' என்று பெயர் வைத்தது. இந்தத் திட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்ததன் மூலம் என்னுடைய மானசீக குரு ரஜினி சாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் அவர் மீது எனக்கு உள்ள அன்பையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அவர் தான் என்னுடைய வாழும் ரோல்மாடல். சூப்பர் ஸ்டாரை உலகெங்கும் உள்ள பல லட்சம் ரசிகர்கள் போற்றி பாராட்டு வருகின்றனர். அந்த வகையில் எனக்கு ஒரு நல்ல ரோல்மாடலாக இருப்பவரின் பெயரை வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி தலைவா” எனக் குறிப்பிட்டிருந்தார் கிரீஷ் மாத்ரூபூதம்