ஓயோ நிறுவனத்தின் சுயாதீன இயக்குநராக பாராலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மிகவும் முக்கியமான யூனிகார்ன் நிறுவனமாகத் திகழும் OYO குழும நிறுவனம். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை மற்றும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஓயோ இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.


ஆனால், கொரோனா யாரை விட்டுவைத்தது, எதை விட்டுவைத்தது என்பதுபோல் கொரோனா காலத்தில் பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் பல முக்கிய நகரங்களில் இருக்கும் அலுவலகத்தை நிரந்தரமாக மூடி செலவுகளைப் பெரிய அளவில் குறைத்தது. 






பின்னர் இந்தியா இரண்டாவது அலையில் இருந்து மீண்டு தற்போது பொருளாதார ஏற்றம் கண்டுள்ளதால் ஒயோவும் சரிவிலிருந்து மீண்டு வருகிறது.




இந்நிலையில்தான் ஓயோ நிறுவனத்தின் சுதந்திர இயக்குநராக தீபா மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரியோ பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், இந்திய பாராஒலிம்பிக் கமிட்டி தலைவருமான தீபா மாலிக்.
இவரை  இயக்குநராக நியமித்துள்ளது குறித்து ஓயோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் எங்கள் இயக்குநர்கள் குழுவிற்கு தீபா மாலிக்கை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மாலிக்கின் அனுபவமும், பயணத்தில் அவருக்குள்ள நாட்டமும் எங்கள் நிறுவனத்திற்கு பெரும் முதலீடு. அவர் இந்திய இளம் தலைமுறையினருக்கு மட்டும் உத்வேகம் அளிக்கும் பெண்மணி அல்ல, அவருடைய புத்தாக்க மனோபாவம் ஓயோ நிறுவனத்திற்கு பெரும் பொக்கிஷம் என்று தெரிவித்துள்ளது.


தீபா மாலிக்கும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ஓயோவில் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். அந்நிறுவனம் உயர் தரம் கொண்டது. அதன் ஊழியர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். ஓயோ நிறுவனத்தின் சமூக, சுற்றுசூழல், நிர்வாகக் கொள்கைகள் மேன்மையானவை. குழுவில் இணைவதி மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.