ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து 214 கோடி ஆகி உள்ளது.தற்போது புழக்கத்தில் உள்ள மொத்த கரண்சி நோட்டுகளில் அது 1.6 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது.


புழக்கத்தில் உள்ள அனைத்து வகை ரூபாய் நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி ரூபாய் 13,053 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டில் ரூபாய் 12,437 கோடியாக இருந்தது.


மார்ச் 2020 இறுதியில், புழக்கத்தில் இருந்த ரூ.2000 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 274 கோடியாக இருந்தது, இது புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கையில் 2.4 சதவிகிதமாகும். மார்ச் 2021 நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 245 கோடி ஆகி உள்ளது. இது புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 2 சதவிகிதம். கடந்த நிதியாண்டின் இறுதியில் இது 214 கோடியாகி உள்ளது.இது மொத்த நோட்டுகளின் புழக்கத்தில் 1.6 சதவிகிதம். 


மதிப்பின் அடிப்படையில், ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் மதிப்பில் 22.6 சதவிகிதத்தில் இருந்து மார்ச் 2021 இறுதியில் 17.3 சதவிகிதமாகவும், மார்ச் 2022 இறுதியில் 13.8 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.


இந்த அறிக்கையின்படி, புழக்கத்தில் உள்ள ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் 3,867.90 கோடியிலிருந்து 4,554.68 கோடியாக உயர்ந்துள்ளது.


"தொகுதி அடிப்படையில், ரூ. 500 மதிப்பிலான நோட்டுகள் 34.9 சதவிகிதமாக இருந்தது, அதைத் தொடர்ந்து ரூபாய் 10 மதிப்புள்ள வங்கி நோட்டுகள், மார்ச் 31, 2022 வரை புழக்கத்தில் உள்ள மொத்த வங்கி நோட்டுகளில் 21.3 சதவிகிதமாக இருந்தன" என்று 2021க்கான ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. 


மார்ச் 2021 இறுதியில் ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளின் பங்கு 31.1 சதவிகிதமாகவும், மார்ச் 2020 நிலவரப்படி 25.4 சதவிகிதமாகவும் இருந்தது. மதிப்பு அடிப்படையில், இந்த நோட்டுகள் மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை 60.8 சதவிகிதத்திலிருந்து 73.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.


2021 மார்ச் மாத இறுதியில் ரூபாய் 28.27 லட்சம் கோடியாக இருந்த அனைத்து வகை ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு இந்த ஆண்டு மார்ச் இறுதியில் ரூபாய் 31.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.


“மதிப்பு அடிப்படையில், ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளின் பங்கு, மார்ச் 31, 2022 அன்று புழக்கத்தில் உள்ள வங்கி நோட்டுகளின் மொத்த மதிப்பில் 87.1 சதவிகிதமாக இருந்தது, இது 2021 மார்ச் மாத இறுதியில் 85.7 சதவிகிதமாக இருந்தது” என அறிக்கை கூறுகிறது.


”2020-21ல் முறையே 16.8 சதவிகிதம் மற்றும் 7.2 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, ​​2021-22ல் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு முறையே 9.9 சதவிகிதம் மற்றும் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.


தற்போது, ​​இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 ஆகிய மதிப்புகளில் ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது என்பது கவனிக்கவேண்டியது.