கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான மக்களின் அங்கலாய்ப்பு ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்காமல் போய்விட்டோமே என்பதாகத் தான் இருந்தது. இதுபோன்று எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும்போது ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மிகவும் அவசியமாகிறது. இது நம்மை பெரும் நிதிச் சுழலில் இருந்து தற்காக்கவும் கூடியது.
இன்று சந்தையில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் மனித இயல்பு சாய்ஸ் அதிகமாக இருக்கும்போதுதான் குழப்பமும் அதிகமாகிறது. அதனால் சந்தையில் இருக்கும் பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிஸிக்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து அதனை ஒப்பிட்டு அறிய வேண்டும். ஒரு ஹெல்த் இன்சூரன்ஸில் முதலீடு செய்யும் முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டியது.
இந்த திட்டம் யாருக்கானது? ஏன் அவசியமானது?
நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது அது தனிநபருக்கா, குடும்ப நல இன்சூரன்ஸா? அல்லது மூத்த குடிமக்களுக்கானதா என்பதை முதலில் வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியா சலுகைகள் இருக்கின்றன. அதேபோல் சாதாரண இன்சூரன்ஸா அல்லது குறிப்பிட்ட நோய் சார்ந்ததா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
நிதி நிலைமையை கருத்தில் கொள்ளுங்கள்:
உங்கள் வருமானம், உங்கள் மருத்துவ செலவை ஆராய்ந்து அதற்கேற்ப பாலிசியை தேந்தெடுங்கள். எந்த ப்ரீமியம் உங்களால் செலுத்தத்தக்கதாக உள்ளதோ அதையே நாடுங்கள். மருத்துவ இன்சூரன்ஸ் நல்லது. ஆனால் உங்கள் வருமானத்தை பதம் பார்த்து தான் அந்த பாலிசியை எடுக்க வேண்டுமா என்பதை யோசியுங்கள். வருவாய்க்கு ஏற்ற பாலிசிதான் அவசியம்.
சரியான இன்சூரன்ஸ் முதலீட்டுத் தொகையை தேர்ந்தெடுங்கள்..
சரியான இன்சூரன்ஸ் முதலீட்டுத் தொகையை தேர்ந்தெடுப்பதும் அவசியம். இன்சூரன்ஸ் கம்பெனியானது உங்கள் இன்சூரன்ஸ் சம்மிற்கு மேலான செலவை ஏற்காது. அதனால் இன்சூரன்ஸ் சம் என்பதை சரியாக தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதிக சம் என்றால் ப்ரீமியமும் அதிகமாக இருக்கும். ஒருவேளை அந்த ப்ரீமியம் கட்டுவது சிக்கல் என்றால் அப்படியான பாலிசியை தேர்வு செய்ய வேண்டாம்.
கவரேஜ் மற்றும் இணைப்பு மருத்துவமனைகளை கருத்தில் கொள்ளுங்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது அதன் கவரேஜ் மற்றும் அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இருக்கும் மருத்துவமனையையும் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் இருந்தால் மெட்டர்னிட்டி பெனஃபிட்ஸ் தரும் ப்ளான்களை தேர்வு செய்யுங்கள். அதேபோல் ஹெல்த் இன்சூரன்ஸில் ரூம் வாடகை போன்றவையும் கவராகுமா என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.
அதேபோல் எந்த மருத்துவமனைகள் எல்லாம் நீங்கள் தேர்வு செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பில் இருக்கின்றன என்பதை கவனியுங்கள். உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் பேன் இந்தியாவில் பல்வேறு மருத்துவமனைகளுடனும் டை அப்பில் இருந்தால் அது நலம் பயக்கும்.
ரைடர்ஸ் பார்த்து தேர்வு செய்யவும்...
ஹெல்த் இன்சூரன்ஸில் ரைடர்ஸ் பார்த்து தேர்வு செய்தல் அவசியமாகும். ரைடர்ஸ் என்பது உங்கள் பாலிஸியின் கவரேஜை தேவைக்கேற்ப மேம்படுத்தித் தரக்கூடியது. சில பாப்புலர் ரைடர்ஸ் விபத்து மற்றும் கிரிட்டிக்கல் இல்னெஸ் எனப்படும் மிகவும் ஆபத்தான நோய்களையும் கவர் செய்யும்.
எனவே ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன்னர் குறைந்தது மேற்கூறிய ஐந்து விஷயஙக்ளையாவது கணக்கில் கொள்ளுங்கள்.